பக்கம் எண் :


369

6. நகர் நீங்கிய காண்டம்
 

       [அரிச்சந்திரன் முனிவர்க்கு நாடு நகரங்களைக் கொடுத்தபின்பு
         தன் மனைவி மைந்தனுடன் அந்நகரத்தை விட்டு நீங்கிச்
               செல்வது இக்காண்டத்திற் கூறப்படுகிறது.]

    அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
753. தலமுழுதும் தவமுனிவன் றனக்களித்தேம் இனியுறைத
   றகுதி யன்றென்
றிலகுமணி மண்டபமும் எழின்மணிச்சிங் காதனமும்
   இழிந்து போந்து
டலஅரச ருடனமைச்சர் அழுதுடன்போய்ப் பரதவிக்கப்
   பதாதி மொய்க்கக்
குலமகனும் மடமயிலும் முன்நடக்கப் பின்நடந்தான்
   கொற்ற வேந்தன்.

     (இ - ள்.) தலம் முழுதும் தவமுனிவன் தனக்கு அளித்தேம் -
நாடு நகரம் முதலிய இடங்களையெல்லாம் தவமுனிவனாகிய
கௌசிகனுக்குக் கொடுத்துவிட்டோம், இனி உறைதல் தகுதி அன்று என்று
- இனிமேல் இங்குத் தங்குதல் முறையன்று என எண்ணி, இலகு மணி
மண்டபமும் எழில் மணிச் சிங்காதனமும் இழிந்து போந்து - விளங்குகின்ற
மணி மண்டபத்தையும் அழகிய சிங்காதனத்தையும் விட்டு நீங்கி, பல
அரசருடன் அமைச்சர் அழுது உடன் போய்ப் பரதவிக்க - பல
சிற்றரசர்களும் அமைச்சர்களும் அழுதுகொண்டு பின் தொடர்ந்து போய்
வருந்தும்படி, பதாதி மொய்க்க - காலாட்படை முதலியன சூழ்ந்துவர,
குலமகனும் மடமயிலும் முன் நடக்க - குலமகனாகிய தேவதாசனும்
இளமயில் போன்ற மனைவியும் முன்னால் நடந்து செல்ல, கொற்ற
வேந்தன் பின் நடந்தான் - வெற்றியையுடைய மன்னன் பின்னால் நடந்து
சென்றான்.

     அரிச்சந்திரன் அயோத்திநகரை விட்டு நீங்கினான் என்பது கூறும்
பகுதி இது; மண்டபம் சிங்காதன முதலிய யாவும் முனிவனுக்
களித்துவிட்டோம்; இனி அவ்விடங்களில் இருப்பதும் இழிவு என்று கருதி
இறங்கினான்; மைந்தனும் மனைவியும் முன்னடந்து சென்றனர்; மன்னன்
பின் சென்றான் என்பது.
                                                     (1)

 
754. தொடைதுறந்து முடிதுறந்து பணிதுறந்து துடிமுரசும்
   துறந்து தாமக்
குடைதுறந்து வெண்கவரிக் குழாம்துறந்து கரிபரிதேர்க்
   குலந் துறந்து