பக்கம் எண் :


370

கடைதுறந்து மறுகணைந்த காவலன்தன் றிருமுகத்தைக்
   கண்டோ ரெல்லாம்
அடையமன மழிந்துருகி அவரவரே முகத்தில்அறைந்
   தழுவார் ஆனார்.

     (இ - ள்.) தொடை துறந்து முடி துறந்து பணி துறந்து துடி முரசும்
துறந்து - மாலைகளை நீக்கித் தலையிலணிந்த முடியை நீக்கி
ஆபரணங்களை நீக்கி உடுக்கையும் முரசமும் ஒலித்தலை நீக்கி,
தாமக்குடை துறந்து - மாலைகளையுடைய குடையை நீக்கி, வெண் கவரிக்
குழாம் துறந்து - வெண்மையான கவரிமான் மயிராலாகிய சாமரை வீசும்
பெண்களை நீக்கி, கரி பரி தேர்க் குலம் துறந்து - யானைகளையும்
குதிரைகளையும் தேர்க்கூட்டத்தையும் துறந்து, கடை துறந்து மறுகு
அணைந்த காவலன் தன் திருமுகத்தைக் கண்டோரெல்லாம் -
அரண்மனை வாயிலைக்கடந்து வீதியில் வந்த மன்னனுடைய
திருமுகத்தைக் கண்ட வர்களெல்லாம், அடைய மனம் அழிந்து உருகிய
அவரவரே முகத்தில் அறைந்து அழுவார் ஆனார் - முழுவதும் மனம்
அழிந்து உருகி அவரவர் தம் முகத்தில் அறைந்துகொண்டு அழுதார்கள்.

     முடி குடை முதலிய அரசர்கட்குரிய சின்னங்கள் அத்தனையும்
நீக்கித் தனியே நடந்து தெருவில் அரிச்சந்திரன் செல்வது கண்ட
மக்களெல்லாரும் முகத்தில் அடித்து அடித்து அழுதனர் என்க. துறந்து
என்ற சொற் பலவிடங்களில் வந்ததால் இது சொற்பொருட்
பின்வருநிலையணி.
                                                     (2)

 
755. மயிரோடும் சிறைஇழந்த போகில்போல் வேலியொடு
   வரம்பி ழந்த
பயிரேபோற் கரமிழந்த கரியேபோற் பொறிஇழந்த
   பாவையே போல்
உயிரேபோய்ப் பரதவிக்கும் உடலேபோல் மத்தாலுள்
   ளுடைந்த லம்பும்
தயிரேபோற் றளர்ந்தலைந்து தத்தமக்கு நிகழ்ந்தவெலாம்
   சாற்ற லுற்றார்.

       (இ - ள்.) மயிரோடும் சிறை இழந்த போகில் போல் -
மயிருடன் சிறகையும் இழந்துவிட்ட பறவை போலவும், வேலியொடு வரம்பு
இழந்த பயிரே போல் - வேலியுடன் வரம்பையும் இழந்துவிட்ட
பயிரைப்போலவும், கரம் இழந்த கரியே போல் - கையை இழந்து விட்ட
யானை போலவும், பொறி இழந்த பாவையே போல் - இயந்திரக் கயிறு
இழந்துவிட்ட பதுமை போலவும், உயிரே போய்ப் பரதவிக்கும் உடலே
போல் - உயிர் நீங்கி வருந்துகின்ற உடல் போலவும், மத்தால் உள்
உடைந்து அலம்பும் தயிரே போல் - மத்தினால் உடைந்து அலைகின்ற
தயிர் போலவும், தளர்ந்து அலைந்து - தளர்ந்து வாடி, தத்தமக்கு நிகழ்ந்த
வெலாம் சாற்றலுற்றார் - தங்களுக்கு நிகழ்ந்தவற்றையெல்லாம் கூறத்
தொடங்கினார்கள்.