இனி எக்காலமும் வாரேன்
என்று உறுதியாகக் கூறினன்.
(14)
767. |
முன்செய்த
தீவினையோ முனிசெய்த உபகாரம்
முன்உண் டாகப்
பின்செய்த கைம்மாறோ பேரரசு கொடுத்தகன்று
பெருங்கா டெய்த
மின்செய்த நெடுவேலாய் மெய்த்தவனை யாம்துரந்து
விட்டே மாகில்
என்செய்வான் எனஉரைப்பார் யாம்போதும்
அவன்போருக்
கெதிர்க்க என்பார். |
(இ - ள்.) மின் செய்த நெடு வேலாய்
- ஒளிவீசுகின்ற நீண்ட
வேலையுடையவனே!, முன் சேய்த தீவினையோ - நாங்கள் முற்பிறவிகளில்
செய்த தீவினைதானோ, பேர் அரசு கொடுத்து அகன்று பெருங்காடு எய்த
- பெரிய அரசாட்சியை நீ முனிவரிடம் கொடுத்து நீங்கிப் பெரிய
காட்டிலே அடைந்து வாழ, முனீ செய்த உபகாரம் முன் உண்டாக -
முனிவர்க்கு நீ செய்த உதவி முன்னே இருக்க, பின் செய்த கைம்மாறோ
- அவன் பிறகு உனக்குச் செய்த மாற்றுதவி இது தானோ, மெய்த்தவனை
யாம் துரந்து விட்டேமாகில் - உண்மைத் தவம் செய்த முனிவனை யாம்
துரத்திவிட்டோமானால், என் செய்வான் - அவன் என்னசெய்வான், என
உரைப்பார் - என்று கூறுவார்கள், அவன் போருக்கு எதிர்க்க யாம்
போதும் என்பார் - அவனைப் போரிலே எதிர்த்துத் துரத்த யாம்
இப்போதே போகின்றோம் என்றும் கூறினார்கள்.
'நீ நாடு துறந்து காடு செல்வது நாங்கள் செய்த தீவினையோ
அல்லது விசுவாமித்திரன் செய்த கைம்மாற்றுதவியோ நாம் அறியோம்.
அவனைத் துரத்திவிடுகின்றோம்; நீ வருக' என்றும் குறிப்புக் காட்டுவார்
சிலர்.
(15)
768. |
தோல்ஏந்தும்
மார்பில்மலர்த் தொடைஏந்தத் தருப்பைமுடிச்
சுருக்கத் தோடே
கோலேந்தும் குறுங்கைகதிர் வேலேந்தக் கனகமுடி
கோடீ ரத்தின்
மேலேந்தி இருடிஇருந் துலகாள அவன்குடைக்கீழ்
வீணே அன்னான்
காலேந்தி வாழ்வதின்யாம் கனல்மூழ்கல் அமையும்எனாக்
கட்டு ரைப்பார். |
(இ
- ள்.) தோல் ஏந்தும் மார்பில் மலர்த் தொடைஏந்த - மான்
தோலைப் பூணுகின்ற மார்பில் மலர்மாலை சூடியும், தருப்பை முடி
சுருக்கத்தோடே கோல் ஏந்தும் குறுங் கை - தருப்பைப்புல் முடிச்சுகளுடன்
முக்கோலைப் பிடிக்கின்ற குறுகிய கை, கதிர் வேல் ஏந்த - ஒளிமிக்க
|