பக்கம் எண் :


379

வேலை ஏந்திப் பிடிக்கவும், கோடீரத்தின்மேல் கனக முடி ஏந்தி -
சடைமுடியின்மேல் பொன் முடியை ஏந்திக்கொண்டு, இருடி இருந்து உலகு
ஆள - முனிவன் இருந்து உலகத்தை ஆளும்போது, அவன் குடைக்கீழ்
வீணே - அவன் குடைநிழலின்கீழ் வீணாக, அன்னான் கால் ஏந்தி
வாழ்வதின் - அவனுடைய கால்களை ஏந்திக்கொண்டு வாழ்வதைவிட,
யாம் கனல் மூழ்கல் அமையும் எனா கட்டுரைப்பார் - யாம் நெருப்பில்
மூழ்குதல் நன்று என்று எடுத்துக் கூறினர்.

     முனிவர் தம்பூணூலில் மான் தோலினைக் கட்டியிருப்பர். கோல் -
முக்கோல். மன்னனுடைய கை மிக நீண்ட கை. அதனை நோக்க
முனிவனுடைய கை குறுகியது ஆதலின் 'குறுங்கை' என்றார்.
அரசனாயிருந்து ஆள்வதற்கு ஆண்மையும் அழகும் வேண்டும் அன்றோ?
மான்றோலை யணிந்த மார்பு, பூமாலை புனைந்தால் எங்ஙனம் சிறந்து
விளங்கும்? தருப்பைமுடி, முக்கோல் இவற்றை ஏந்திய கை வேல்
ஏந்தினால் என்ன சிறப்பைத் தரும்? சடையுடைய முடியிற் கிரீடம்
அணிந்தால் எங்ஙனம் அழகு விளங்கும்? அரசுக்குத் தகுதியில்லாத
ஒருவனை அரசனாகக்கொண்டு அவன் காலை வணங்கி வாழ்வதினும்
தீயின் மூழ்கி இறப்பதே நன்று என்று சிலர் கூறினர்.
                                                    (16)

 
769. சடைபிடித்தும் கரம்பிடித்தும் தாள்பிடித்தும் மரவுரியாற்
   றகைந்து டுத்த
உடைபிடித்தும் ஈர்த்தவனை உயர்வனத்தில் இப்பொழுதே
   ஓட்டு கின்றோம்
மடைபிடித்த வயல்சூழும் வளநாடு நீபுரக்க
   வருவாய் என்று
படைபிடித்த மலர்க்கரத்தாற் பதம்பிடித்து விறல்வேந்தர்
   பணிந்து வீழ்ந்தார்.

       (இ - ள்.) சடை பிடித்தும் கரம் பிடித்தும் தாள் பிடித்தும் -
முனிவனுடைய சடையைப் பிடித்தும் கைகளைப் பிடித்தும் கால்களைப்
பிடித்தும், மர உரியால் தகைந்து உடுத்த உடை பிடித்தும் -
மரவுரியினாலே நன்றாக இறுக்கிக் கட்டிய உடையைப் பிடித்தும், அவனை
ஈர்த்து உயர்வனத்தில் இப்பொழுதே ஓட்டுகின்றோம் - அவனை இழுத்து
இப்பொழுதே பெரிய காட்டில் ஒட்டிவிடுகின்றோம், மடை பிடித்த வயல்
சூழும் வள நாடு நீ புரக்க வருவாய் என்று - நீர் பாயும்
மடைகளையுடைய வயல்களால் சூழப்பெற்ற வளமான நாட்டைக் காக்க நீ
வருவாயாக என்று, விறல் வேந்தர் படை பிடித்த மலர்க் கரத்தால் பதம்
பிடித்துப் பணிந்து வீழ்ந்தார் - வலிமை வாய்ந்த மன்னர்கள் தம்முடைய
ஆயுதம் தாங்கிய மலர்போன்ற கைகளால் மன்னனுடைய கால்களைப்
பிடித்து வணங்கி வீழ்ந்தனர்.

     ஈர்த்து - இழுத்து. பிடித்தும் என்ற சொல்லுடன் ஈர்த்து என்பதனைத்
தனித்தனி கூட்டி உம்மையைப் பிரித்து ஈர்த்து என்பதுடன் கூட்டுக.
சடைபிடித் தீர்த்தும் கரம்பிடித் தீர்த்தும் எனப் பொருள் கொள்க. 'விறல்
வேந்தர்' என்பதற்கேற்ப, 'படை பிடித்த மலர்க்கரம்' என்றார். கோசிகன்
ஆற்றலை உணராது கூறிய கூற்று இதுவென்று கொள்க.
                                                    (17)