என்னை வைதாய் -
இன்றும் என்னை வைது பேசினாய், நீ எனக்கு
அளித்த மண்டலத்தை யான் தர நீ வாங்காயாகில் - நீ எனக்குக்
கொடுத்த நாட்டை நான் உனக்குத் திருப்பித் தருகின்றேன் அதனை நீ
வாங்காது இருப்பாயானால், இன்று இவர் உரைத்த தீமை எல்லாம்
செய்தாய் என்ன முனி செப்பினான் - இன்று இங்கு இந்த அரசர்
முதலானோர் செய்வதாகச் சொன்ன தீமைகளையெல்லாம் நீ செய்தவன்
ஆவாய் என முனிவன் கூறினான்.
'இன்றிவருரைத்த
தீமை எல்லாம்' என்பது விறல் வேந்தர் சடை
பிடித்தும் கரம் பிடித்தும் வெளியே துரத்துவோம் என்பது முதலாகச்
சொல்லிய தீயசொற்களை யுணர்த்தியது. நீ பூமியை நான் தர
வாங்கிக்கொள். இது செய்தால் நல்லது. நான் அரசு புரிய முடியாது.
வாங்கிக்கொள்ளமாட்டேன் என மறுத்தால் எனக்குத் தீமை செய்தவன்
நீதான் என்று சினந்து கூறினர் கோசிகர் என்பது.
(19)
772. |
சிறுத்தவர்க
ளறியாமற் செய்தபிழை அத்தனையும்
செவ்வி யோய்நீ
பொறுத்தருளா யாமாகிற் பொறைஎன்னாம் முறைஎன்னாம்
புலமை என்னாம்
ஒறுத்திடினும் வெறுத்திடினும் உனக்களித்த அரசுரிமை
ஒருகா லத்தும்
மறுத்தினியான் வாங்கேன்என் றெடுத்துரைத்தான் மன்னன்முனி
வாட்ட முற்றான். |
(இ - ள்.) சிறுத்தவர்கள் அறியாமல்
செய்த பிழை
அத்தனையும் - சிறியோர்கள் அறியாமையினால் செய்த
பிழைகளையெல்லாம், செவ்வியோய் - நல்ல தன்மைகளை யுடையோய்!, நீ
பொறுத்தருளா யாம் ஆகில் பொறை என்னாம் முறை என்னாம் புலமை
என்னாம் - நீ பொறுத்துக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய
பொறுமை என்ன பயனைத் தரும் உன்னுடைய நீதிமுறை என் ஆகும்
உன்னுடைய அறிவுத் திறம் என்ன பயனைத் தரும், ஒறுத்திடினும்
வெறுத்திடினும் - நீ என்னைத் தண்டித்தாலும் வெறுத்துத் தள்ளினாலும்,
உனக்கு அளித்த அரசுரிமை ஒருகாலத்தும் மறுத்து - உனக்கு நான்
கொடுத்த அரசு உரிமையை ஒருநாளும் மறுத்து, இனி யான் வாங்கேன்
என்று மன்னன் எடுத்து உரைத்தான் - இனிமேல் நான் வாங்கிக்கொள்ள
மாட்டேன் என்று மன்னன் கூறினான், முனி வாட்டம் உற்றான் - முனிவன்
தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்று முகவாட்டம் அடைந்தான்.
சால்பு உடையவர் பொறுத்துப் பிறர்க்கு நன்மையே
செய்வர்.
"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு"
என்ற குறட்கருத்து இச்செய்யுளில் அமைந்துள்ளது. விறல் வேந்தர் கூறியது
மிகவும் கொடிய கூற்று. அவர்கள் என் கருத்தறியாமற் கூறினர். ஆதலால்
அக் குற்றத்தையும் அதனைக் கேட்ட என் குற்றத்தையும் பொறுத்தருள்க
|