பக்கம் எண் :


383

உரைக்க நீ கேளாய் - நான் ஒன்று கூறுகின்றேன் கேட்பாயாக, என்னை
இன்று உரைத்த பிழை பொறுத்தேன் - இன்று என்னைப்பற்றி நீ கூறிய
பிழைமொழிகளைப் பொறுத்துக்கொண்டேன், அழல் வேள்வி
முடித்திடுதற்கு ஈவேன் என்று அங்கு அன்று உரைத்த பொருளதனை
- நான் நெருப்பை வளர்த்துச் செய்யும் வேள்வியை முடிப்பதற்கு நீ
தருவேன் என்று அக்காலத்திற் சொன்ன செல்வத்தை, அளிப்பாயோ
அளியாயோ - கொடுப்பாயோ கொடுக்கமாட்டாயோ, அரச என்றான் -
அரசனே! என்று முனிவன் கூறினான், என்று உரைத்த கௌசிகனை அடி
தொழுது வாய் புதைத்து அங்கு ஈது உரைப்பான் - இவ்வாறு கூறிய
கௌசிகமுனிவனை மன்னன் அவனடிகளில் தொழுது வாயைக் கையால்
மறைத்துக்கொண்டு அங்கு இதனைக் கூறினான்.

     'உண்மைக்கும் வண்மைக்கும் உரியோய்' என மன்னனை முனிவன்
கூறுகின்றான்; இகழ்ச்சிக் குறிப்பு. அளிப்பாயோ அயியாயோ என்றது
அளியேன் என்று கூறுவான் என்று கருதிக் கூறியது எனக் கொள்க.
                                                    (22)

 
775. உன்னுடனே உரைத்தபொருள் உனக்கடியேன் உகந்தளித்த
   உரிமைச் செல்வம்
தன்னுடனே போனதெனா உணர்ந்தேனா யினும்முனிவாற்
   றருவ லென்றே
நின்னுடனே யானுரைத்த சபதம்இனி மாறுவனோ
   நீயாள் விட்டாற்
பொன்னுடனே தருவன்என்றான் புகரோனை அவன் அழைத்துப்
   பொருத்தி னானே.

     (இ - ள்.) உனக்கு அடியேன் உகந்து அளித்த உரிமைச் செல்வம்
தன்னுடனே - உனக்கு அடியேன் விரும்பிக்கொடுத்த என்னுடைய
அரசசெல்வத்துடன், உன்னுடனே உரைத்த பொருள் போனது எனா
உணர்ந்தேன் ஆயினும் - நீ வேள்வி நடத்துவதற்குக் கொடுப்பேன் என்று
நான் சொன்ன பொருள் சேர்ந்து போயிற்று என்று நான் எண்ணினேன்
ஆயினும், முனிவால் - உன்னுடைய கோபத்துக்கு அஞ்சி, தருவல் என்றே
நின்னுடனே யான் உரைத்த சபதம் இனி மாறுவனோ - தருவேன் என்று
யான் உன்னிடத்தில் சொன்ன உறுதி மொழியை இனித் தவறுவேனோ, நீ
ஆள் விட்டால் பொன் உடனே தருவன் என்றான் - நீ ஆள் விட்டு
அனுப்பினால் பொன்னை உடனே தருவேன் என மன்னன் கூறினான்,
புகரோனை அவன் அழைத்துப் பொருத்தினானே - சுக்கிரன் என்னும்
பெயருடைய ஒருவனை அழைத்து முனிவன் மன்னனுடன் அனுப்பினான்.

     புகரோன் - சுக்கிரன். இவன் அசுரகுரு; அச் சுக்கிரனை யழைத்தான்.
இவர்களிடம் கூட்டிக்கொண்டுவந்து சேர்த்தான். வாங்கிக் கொண்டு
வரவேண்டிய பொருளளவினையும் கூறினான் என்று கொள்க.
'பொருத்தினான்' என்ற குறிப்பால் அது விளங்கிற்று.
                                                    (23)