பக்கம் எண் :


433

காட்டினிடத்துச் சென்றபோது, சேண் இடைப் பொறிகளும் கரும் பெரும்
புகையும் தோன்றின - நெடுந் தொலைவில் நெருப்புப் பொறிகளும் கரிய
மிகுந்த புகையும் தோன்றிக் காட்சியளித்தன.

     மூங்கிற்காடு எளிதில் தீப்பற்றிக்கொள்ளும். கழை - மூங்கில். பட்ட
மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோதே தீப்பற்றிக் கொள்ளும்.
மூங்கிற் காட்டுடன் தொடர்ந்த மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும்
அத் தீ அழித்துவிடும்; இஃது இயற்கை.
                                                   (138)

 
            தீ வளைதல்
891. கண்டனர் புகைவதெ தென்னும் காலையில்
மண்டலம் வளர்ந்துயர் வானைத் தாவியே
அண்டரண் டங்களும் வெடிக்க வார்த்தழன்
மண்டலம் எங்கணும் வளைந்து கொண்டதே

       (இ - ள்.) கண்டனர் புகைவது ஏது என்னம் காலையில் -
அரசன் முதலியோர் பார்த்தனர் இங்குப் புகைவது எது என்று ஆராயும்
நேரத்தில், மண்டலம் வளர்ந்து உயர் வானைத் தாவியே -
மண்ணுலகத்திலிருந்து வளர்ந்து உயர்ந்து வானத்தை அளாவிக்கொண்டு,
அண்டர் அண்டங்களும் வெடிக்க ஆர்த்து - விண்ணுலக மண்டலங்களும்
வெடிக்கும்படி ஆரவாரம் செய்து, அழல் மண்டலம் எங்கணும்
வளைத்துக்கொண்டதே - நெருப்பு மண்டலம் எல்லா இடங்களிலும்
வளைத்துக்கொண்டது.

     தீக்கடவுள் தானே நினைத்துசெய்யவந்த செயல் ஆதலால் புகை
தோன்றுவதை ஆராய்வதற்கு முன்னர் வெகு விரைவில் வந்து
வளைத்துக்கொண்டது அத் தீ நாற்புரமும் என்று கொள்க.
                                                   (139)

 
892. இடஞ்சிறி திலைஎன எண்டி சாமுகம்
படர்ந்தன விலங்கெலாம் இரிந்து பாறிடக்
கடந்தவத் தொகுதியைக் கடிது நாடியே
தொடர்ந்தன வென அழற் சுடரெ ழுந்ததே.

     (இ - ள்.) இடம் சிறிது இலை என - இடம் சிறிதும் இல்லை என்று
சொல்லும்படி, எண் திசா முகம் படர்ந்தன - எட்டுத்திசைகளிலும்
அந்நெருப்பானது படர்ந்து சென்றது, விலங்கு எலாம் இரிந்து பாறிட கடந்த
- விலங்குகள் எல்லாம் அஞ்சி ஓடி ஒளியக் கடந்து ஓடின, அத்
தொகுதியைக் கடிது நாடியே தொடர்ந்தன என அழற் சுடர் எழுந்தது -
அவ்விலங்குக் கூட்டங்களைத் தொடர்ந்து தேடி ஓடுவதுபோல அந்
நெருப்புச் சுடர்கொழுந்துவிட்டுப் பரந்து எரிந்தது.

     தீ எட்டுத்திசைகளையும் வளைத்து. விலங்குகள் எல்லாம் தீ
வளைப்பது கண்டு விரைத்தோடின. ஓடும் விலங்குகளைத் தொடர்வது
போலத் தீப்படர்வது தோன்றியது என்பது கருத்து.
                                                   (140)

 
893. அவ்வழல் வளைந்திட அரசர் கோமகன்
இவ்வழ லெவ்வழ லென்று கூறலும்