பக்கம் எண் :


438

     (இ - ள்.) செய்தவப் பயத்தினாலே தோன்றிய செல்வ - நாங்கள்
செய்த தவப்பயனால் பிறந்த செல்வனே!, செய்த கைதவம் உண்டேல்
நம்மைக் கடுங்கனல் கொல்லும் அல்லால் - நாம் செய்த தவறு ஏதேனும்
இருக்குமானானல் நம்மைக் கடுமையான நெருப்புக் கொல்லுமே
அல்லாமல், உய்தக உதவும் உள்ளம் வருந்தலை - நாம் தப்பிப்பிழைக்க
வழி உண்டாகும், உள்ளம் வருந்தாதே; நீ ஒழி என்னா - நீ நெருப்பில்
விழும் எண்ணத்தை விடு என்று, மொய் தழல் தன்னைச் சென்று முடுகி
நின்று இனைய சொல்வாள் - மிகுந்த நெருப்பைக் கிட்டி நின்று விரைந்து
சந்திரமதி பின்வருவனவற்றைக் கூறினாள்.

     'நாம் வஞ்சகஞ் செய்திருந்தால் நெருப்பு நம்மைக் கொல்லும்;
இல்லையெனிற் கொல்லாது என்று கூறி மைந்தனை நிறுத்தித் தான்
மட்டும் நெருங்கிச் சென்று நெருப்பை நோக்கிக் கூறுகின்றாள் என்பது.
                                                   (150)

 
903. மறைவழி கடந்தே மாகில் வரும்விருந் திகழ்ந்தே மாகில் முறைவழி செய்யே மாகில் மூப்பரை இகழ்ந்தே மாகிற் பிறர்மனை நயந்தே மாகிற் பிறர்மனம் வைத்தே மாகிற் குறைசில செய்தே மாகிற் கொல்லெனக் கனலிற் பாய்ந்தாள்.

       (இ - ள்.) மறை வழி கடந்தேமாகில் - வேதநெறியைக் கடந்து
யாம் சென்றிருந்தாலும், வரும் விருந்து இகழ்ந்தேமாகில் - வந்த
விருந்தினரை யோம்பாது இகழ்ந்திருந்தாலும், முறை வழி செய்யே மாகில்
- நீதிமுறைப்படி யாம் அரசு செய்யாமல் இருந்தாலும், மூப்பரை
இகழ்ந்தேமாகில் - மூத்தோரை யாம் இகழ்ந்து பேசியிருந்தாலும், பிறர்
மனை நயந்தேமாகில் - பிறருடைய மனைவியை விரும்பினாலும், பிறர்
மனம் வைத்தே மாகில் பிற ஆடவரை மனத்தில் நினைத்தோமானாலும்,
குறை சில செய்தேமாகில் - வேறு சில குற்றங்களை யாம் செய்திருந்தாலும்,
கொல் எனக் கனலிற் பாய்ந்தாள் - என்னைக் கொல்வாயாக என்று
கூறிக்கொண்டு நெருப்பில் பாய்ந்தாள்.

     சந்திரமதி தன் கணவனையும் சேர்த்துக் கூறிய கூற்றாகக் கொள்க.
பிறர்மனை நயந்தேமாகில் என்பது ஆடவர்க்கே யுரிமையாகும் என்பது
கருதி, 'பிறர்மனம் வைத்தேமாகில்' என்றுங் கூறினள். பொதுவாகப் பிறர்
மனையை விரும்பினாலும் பிறரை மனம் வைத்தாலும் என்று இருவருக்கும்
கொள்ளினும் பொருந்தும். மனை - மனைவாழ்க்கையை எனக் கொள்க.
                                                    (151)

 
              தீத்தெய்வம் மறைதல்
904. மதுரமென் மொழியாள் கற்பு வளர்நெடு வடவைத் தீயின்
முதிர்தழ லதுதா னென்னைச் சுடுமெனா முழங்கு செந்தீ
அதிர்குர லார்ப்பு மாறி யடங்கிநா வொடுங்கிக் காலைக்
கதிரவன் வரவு கண்ட இருளெனக் கழிந்த தன்றே.