பக்கம் எண் :


443

     பெண்கள் ஆற்றில் நீராடும்போது அவர்கள் கொங்கைகளிற் பூசிய
கலவைச்சாந்து கரைந்து பொய்கைகளில் உள்ள நுரையும் அலையும் மீன்
கூட்டமும் செந்தாமரையும் சங்கும் வாவிக் கரையும் மணங் கமழும்
என்பது கருத்து.
                                                     (4)

 
911. கரும்பினை ஒடித்து மள்ளர் கடாவினை அடிக்கச் சிந்தி
நிரம்பின முத்தம் எங்கும் நீணிலாக் கதிர்ப ரப்பித்
திரும்பின திசைக டோறும் திகழ்தலாற் செறிந்து பன்மீன்
அரும்பிய வானும் அந்நாட் டசனியும் ஒத்த வன்றே.

       (இ - ள்.) கரும்பினை ஒடித்து மள்ளர் கடாவினை அடிக்க -
கரும்பை ஒடித்து உழ்வர் எருமைக்கடாக்களை அடிக்க, சிந்தி நிரம்பின
முத்தும் எங்கும் நீள் நிலாக் கதிர் பரப்பி - சிந்தி நிரம்பிக்கிடந்த
முத்துகள் எல்லாவிடங்களிலும் நீண்ட நிலாப் போன்ற ஒளியைப் பரப்பி,
திரும்பின திசைகள் தோறும் திகழ்தலால் - திரும்பிப் பார்க்கும்
திசைகளிலெல்லாம் விளங்குதலால், செறிந்து பன்மீன் அரும்பிய வானும்
அந்நாட்டு அசனியும் ஒத்த - நெருங்கிப் பல விண்மீன்கள் தோன்றிய
வானுலகத்தையும் இடியோடு கூடிய மின்னலையும் போலக் காட்சியளித்தன.
(அன்று, ஏ : அசைநிலை.)

     அசனி - இடி; மள்ளர் எருமைக் கடாக்களைக் கரும்பினால்
அடிக்கும் ஒசை இடியைப்போல இருந்தது. வெடித்துச் சிந்திய முத்தங்கள்
விண்மீன் அரும்பிய வானை ஒத்திருந்தது. அந்நாட்டு அசனி என்றது,
விண்ணுலகத்திலுள்ள இடி என்பதை யுணர்த்தியது.
                                                     (5)

 
912. காய்ந்தவெஞ் சினக்க டாக்கள் கமலங்கள் சிதைத்த ழுந்திச்
சாய்ந்தவக் கழிக ளெல்லாம் சங்கினம் சரிவ மேதி
தோய்ந்தபூந் தடங்க ளெல்லாம் துள்ளுவ வாளைக் காளை
பாய்ந்தவக் கழிக ளெல்லாம் பறிவன பலவி னூறல்.

     (இ - ள்.) காய்ந்த வெஞ் சினக் கடாக்கள் - உழவர் அடித்தலால்
சினங்கொண்ட எருமைக்கடாக்கள், கமலங்கள் சிதைத்து அழுந்திச் சாய்ந்த
- தாமரைகளைச் சிதைத்து அழுந்தும்படி செய்து பள்ளமாக்கிய, அக்
கழிகள் எல்லாம் சங்கு இனம் சரிவ - அந்தக் கால்வாய்களில் எல்லாம்
சங்குக் கூட்டங்கள் தவழ்ந்தன, மேதி தோய்ந்த பூந்தடங்கள் எல்லாம் -
எருமைகள் குளித்த பூங்குளங்களில் எல்லாம், துள்ளுவ வாளை காளை -
இள வாளை மீன்கள் பாயும், பாய்ந்த அக்கழிகள் எல்லாம் பலவின் ஊறல்
பறிவன - அவ்வாளைகள் பாய்ந்து உழக்கின பள்ளங்களிலெல்லாம்
பலாப்பழத்தின் தேன் வந்து நிறையும்.

     வாளைக் காளை என்பது இளமையான வாளை மீன்களை
யுணர்த்தியது. காளைப்பருவம் என்று கூறுவதும் காண்க. எருமைக்கடாக்கள்
உழும்போது தாமரைகளை மிதித்துச் சிதைத்துச் சேற்றிற் பள்ளமாக்கும்
எனவும், அப்பள்ளத்திற் சங்குகள் விழுந்துகிடக்கும் எனவும், குளங்களில்
நீர் குடிக்கச்சென்ற எருமைகள் கலக்கியபோது வாளை மீன்கள் துள்ளும்
எனவும், துள்ளி வீழ்ந்த பள்ளங்களில் பலாப்பழத்தின் சாறுபோய் நிறையும்
எனவும் கண்டு கொள்க.
                                                     (6)