பக்கம் எண் :


444

913. கடைசியர் குரவை கேட்டுக் கலங்கியே மயங்கிக் காவின்
இடைஇடை மறைவ தேபோ லிரிவன கிளிக ளெல்லாம்
மடைஇடை சரியும் முத்தம் வளரிள நகைகண் டஞ்சி
உடைபெரும் புனலி லோடி ஒளிப்பன போன்ற வன்றே.

     (இ - ள்.) கடைசியர் குரவை கேட்டுக் கலங்கியே மயங்கி -
உழத்தியராகிய பெண்களின் குரவைப் பாடலைக் கேட்டுக் கலங்கி மயங்கி,
இடைஇடை மறைவதே போல் இரிவன கிளிகள் எல்லாம் - இடையிடையே
மறைவது போலக் கிளிகளெல்லாம் அஞ்சி ஓடின, மடை இடை சரியும்
முத்தம் - நீர் மடைகளிலே சரிந்து ஓடுகின்ற முத்துகள், வளர் இள நகை
கண்டு அஞ்சி - அப்பெண்களின் வளரும் இளமையான பல் வரிசையைக்
கண்டு அஞ்சி, உடை பெரும் புனலில் ஒடி ஒளிப்பன போன்ற - உடைத்து
ஓடும் நீர்வெள்ளத்தில் ஓடி மறைவன போன்று காட்சியளித்தன. (அன்று,
ஏ : அசைநிலை.)

     கிளிகள் சோலைகளில் இயற்கையாக மறைவதைக் கடைசியர்
குரவையொலி கேட்டு அஞ்சி மறைவதாகவும், முத்துகள் மடையிடையே
சரிந்து விழுவதைப் பற்களைக் கண்டு அஞ்சியோடுவதாகவும் கற்பித்தலால்
இது தற்குறிப்பேற்றவணி.
                                                     (7)

 
914. இன்விளை மதுஉண் மள்ள ரிருந்துநாள் கொண்டு வித்தி
முன்விளை செந்நெல் கொய்து வருமுதன் முதிர்ந்து காய்ந்த
பின்விளை கதிர்க ளாலைப் பெருக்கினின் முளைப்ப வெல்லாம்
பொன்விளை குரலிற் றோன்றும் வெள்ளிவால் போன்ற அன்றே.

       (இ - ள்.) இன் விளை மது உண் மள்ளர் இருந்து நாள்
கொண்டு வித்தி - இனிமை தருகின்ற கள்ளைக் குடித்து மகிழும்
மள்ளர்கள் இருந்து நல்ல நாள் பார்த்து விதைத்து, முன் விளை செந்நெல்
கொய்து - முதலில் விளைந்த செந்நெல்லை அறுத்துக்கொண்டு, வரு முதல்
முதிர்ந்து காய்ந்த பின் - அடிப்பாகம் முதிர்ந்து காய்ந்த பிறகு, விளை
கதிர்கள் ஆலைப் பெருக்கினில் முளைப்ப எல்லாம் - விளை கதிர்கள்
கருப்பஞ்சாற்றினால் எல்லாம் முளைக்கின்றன ஆதலால் அவை, பொன்
விளை குரலில் தோன்றும் வெள்ளி வால் போன்ற பொன்போல்
விளைகின்ற கதிருக்கு வெள்ளி வால் முளைத்தது போலக் காட்சி
அளித்தன.

     செந்நெற் கதிர்கள் முன் விளைந்தபின் அத் தாள்களிற் பின்னம்
தளிர்த்து விளைகின்ற கதிர்களெல்லாம் கரும்பின் சாறு பாய்ந்து
விளைவதால் வெள்ளி வால் போலத் தோன்றின.
                                                     (8)

 
915. இயலறி புலவோர் தம்மாட் டுள்ளன விரவோர்க் கீந்த
செயலறிந் துளநாள் கைம்மா றளித்திடச் செல்வோர் போல
வயல்வளஞ் சுரக்க மேனாண் மழைவளஞ் சுரந்த சீர்சால்
புயல்வளர் விசும்பிற் செந்நெல் போய்ப்புக வளர்ந்த வன்றே.

     (இ - ள்.) இயல் அறி புலவோர் தம் மாட்டு உள்ளன இரவோர்க்கு
ஈந்த செயல் அறிந்து - கொடையின் இலக்கணம் தெரிந்த அறிஞர்
தம்மிடம் உள்ள பொருளைப் பொருளில்லாத ஏழைமக்களுக்குக் கொடுத்த
செயலை