தெருவில்
மங்கையர் நெருக்கம் இருந்தது. அவர்கள் கூந்தல் காடு,
கண்ணாகிய கடல், அல்குலாகிய பாம்பு, முலையாகிய மலை இவற்றைக்
கடந்துசெல்வது மிகவும் அரிதாயிற்று என்பது கருத்து.
(13)
920. |
உத்திர பத்தி
மீதி லுயர்ந்தமா ளிகையி னெற்றிச்
சித்திரச் சாள ரங்க டிறந்துசெந் திருவை அன்னார்
வத்திரச் சிலைகள் கோட மன்னனை இலக்கா எய்த
அத்திரம் அனந்த கோடி அணைந்தில வறிவுக் கஞ்சி. |
(இ - ள்.) உயர்ந்த மாளிகையின்
உத்திர பத்தி மீதில் நெற்றி
- உயர்ந்த மாளிகைகளின் உத்திர வரிசைகளின் மேல் உச்சியிலே,
செந்திருவை அன்னார் சித்திரச் சாளரங்கள் திறந்து - திருமகளைப்
போன்ற பெண்கள் அழகிய பலகணிகளைத் திறந்து, வத்திரச் சிலைகள்
கோட மன்னனை இலக்கா எய்தா - முகத்திலுள்ள புருவங்களாகிய
வில்களை வளைத்து மன்னனைக் குறிப்பாக வைத்து எய்த, அத்திரம்
அனந்த கோடி அணைந்தில அறிவுக்கு அஞ்சி - கண்ணாகிய அம்புகள்
பலகோடிக் கணக்கானவை மன்னனுடைய அறிவுக்கு அஞ்சி அவன் மேற்
பாய்ந்தில.
மேன்மாடத்துப் பலகணி வழியாக மங்கையர் பலர்
அரிச்சந்திரனைக்
காதலித்து நோக்கினர். அரிச்சந்திரன் அம் மங்கையரை ஏறிட்டுப்
பார்த்திலன் என்பது கருத்து. வத்திரம் - முகம்; வத்திரச் சிலைகள் -
முகத்திலுள்ள விற்கள் என விரிக்க. இது குறிப்பாகப் புருவங்களை
யுணர்த்தின. "புருவச் சிலைவளைத்துக் கண்ணம்பென்னுள்ளம், உருவத்
துரந்தா ரொருவர்" என வருவதும் காண்க.
(14)
|
கோயில்
புகுந்து விசுவநாதரை வணங்குதல் |
921. |
அன்னவை பலகண்
டேகி அணிமணிக் கோயி னண்ணி
நன்னதி புனைந்த சென்னி நாயகன் விசுவ நாதன்
சந்நிதி தன்னிற் சென்னி தரையுற வணங்கிப் போந்து
மன்னவர் பெருமா னங்கோர் மணிமுடிப் பொதியில் சேர்ந்தான். |
(இ
- ள்.) அன்னவை பல கண்டு ஏகி - அத்தகைய பல
காட்சிகளைக் கண்டு சென்று, அணி மணிக் கோயில் நண்ணி - அழகிய
மணிகள் பதிக்கப்பெற்ற கோயிலை அடைந்து, நன்னதி புனைந்து யாற்றைத்
தலையிற் சூடிய விசுவநாதப் பெருமானுடைய திருமுன், சென்னி தரையுற
வணங்கிப் போந்து - தலை தரையிலே படும்படி வணங்கிப் போய்,
மன்னவர் பெருமான் அங்கோர் மணி முடிப்பொதியில் சேர்ந்தான் -
மன்னர் மன்னனாகிய அரிச்சந்திரன் அங்கு ஒரு மணி முடிகளையுயடைய
பொது இடமாகிய அறச்சாலையை அடைந்தான்.
அரிச்சந்திரன்
திருக்கோயில் சென்று கண்டு விசுவநாதரை வணங்கிப்
பின் ஓர் அம்பலம் சேர்ந்தான் என்பது.
(15)
|