|
அம்பலஞ்சேர்ந்து
அடிசில் சமைத்துண்ணல் |
922. |
அப்பெரும்
பொதியில் புக்கா ரமைச்சனங் காடி நண்ணி
எப்பெரும் பண்ட மும்கொண் டெய்தின னிமைப்பி னட்டுச்
செப்பரும் திருவி னல்லா டிருக்கையாற் படைத்த அன்னம்
துய்ப்பன செய்தி ருந்தா ரிருந்தபி னிகழ்ந்த சொல்வாம். |
(இ
- ள்.) அப் பெரும் பொதியில் புக்கார் அமைச்சன் அங்காடி
நண்ணி - அந்தப் பெரிய அம்பலத்தினுள் எல்லாரும் புகுந்தார். புகுந்த
பின் அமைச்சன் கடைத்தெருவிற்குச் சென்று, எப் பெரும் பண்டமும்
கொண்டு எய்தினன் - எல்லாவகையான பொருள்களும் வாங்கிக்
கொண்டுவந்து சேர்ந்தான், செப்ப அரும் திருவின் நல்லாள் இமைப்பின்
அட்டு - சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய திருமகளைப் போன்ற
சந்திரமதி இமைப்பொழுதில் சமைத்து, திருக்கையால் படைத்த அன்னம்
- அவள் அழகிய கையினால் இட்ட சோறு கறிகளை, துய்ப்பன
செய்திருந்தார் - அரசன் முதலானோர் உண்டு மகிழ்ந்திருந்தனர்,
இருந்தபின் நிகழ்ந்த சொல்வாம் - அவ்வாறு இருந்தபின் நடந்தவற்றைச்
சொல்லுவோம்.
பொது
+ இல் = பொதியில் என்பது, பொதுவான இடம்; அறச்
சாலை. மன்னன் மனைவியும் அடுதல் தொழில் வல்லவளாயிருந்தாள்
என்பது இங்குக் குறிப்பாகத் தோன்றியது. 'இமைப்பின் அட்டு'
தொழில்வல்லமையயை யுணர்த்திற்று. சொல்வாம் என்பது நூலாசிரியர்
கூற்று. நாம் என்பது வருவிக்க.
(16)
|
சுக்கிரன்
கடனைக் கொடுக்குமாறு கூறித் தடுத்தல்
சந்தக்
கலி விருத்தம்
|
923. |
ஒருநாள் செல
மறுநாளையி லுறுதீவினை நினையாப்
பொருமால்களி றுடையானொடு புகரோன்மிக வெகுளா
முருகார்தொடை முடியாய்மறை முனிகூறிய பொருணீ
தருமாறுள தெனிலின்றது தருகென்றுத டுத்தான். |
(இ - ள்.) ஒரு நாள் செல மறு நாளையில்
உறு தீவினை
நினையா - ஒரு நாள் சென்றவுடன் மறுநாளில் செய்யவேண்டிய
தீவினைகளை நினைத்து, பொரு மால் களிறு உடையானொடு புகரோன்
மிக வெகுளா - போர் செய்யும் பெரிய யானையையுடைய
அரிச்சந்திரனோடு வெள்ளி என்பவன் மிகவும் கோபித்து, முருகு ஆர்
தொடை முடியாய் - மணம் வீசும் மாலை அணிந்த முடியையுடைய
மன்னனே !, மறை முனி கூறிய பொருள் நீ தருமாறு உளதெனில் -
மறைகளைக் கற்ற முனிவன் கூறிய பொருளை நீ தருமாறு உளதென்றால்,
இன்று அது தருக என்று தடுத்தான் - இன்று அதனைத் தருவாயாக என்று
தடுத்தான்.
'விசுவாமித்திரருக்கு நீ 'தருவேன்' என்று கூறிய
பொருளை இன்றே
தரவேண்டும்; தந்துதான் பின் எங்குஞ் செல்லவேண்டும்' என்று சினந்து
கூறித் தடுத்தான் வெள்ளி.
(17)
|