பக்கம் எண் :


450

         அரசன் விடை கூறுதல்
926. மின்னஞ்சிய இடையாய்கதிர் வேலஞ்சிய விழியாய்
வன்னெஞ்சுடை முனிநம்முடை வளமுள்ளது கொண்டான்
என்னெஞ்சமும் உன்னெஞ்சமும் ஒன்றன்றி இரண்டோ
உன்னெஞ்சறி யாதென்வயி னுளதோபொரு ளென்றான்.

     (இ - ள்.) மின் அஞ்சிய இடையாய் - மின்னலும் அஞ்சக்கூடிய
இடையினை உடைய பெண்ணே! கதிர்வேல் அஞ்சிய விழியாய் - ஒளி
மிக்க வேலும் ஒப்புமையாகாமல் அஞ்சுகின்ற கண்களையுடையவளே!,
வன்நெஞ்சுடை முனி நம்முடை வளம் உள்ளது கொண்டான் -
வலிமையான மனமுடைய முனிவன் நம்முடைய செல்வங்கள்
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டான், என் நெஞ்சமும் உன் நெஞ்சமும்
ஒன்று அன்றி இரண்டோ - என் மனமும் உன் மனமும் ஒன்றே
அல்லாமல் இரண்டு ஆகுமோ, உன் நெஞ்சு அறியாது என் வயின்
பொருள் உளதோ என்றான் - உன் மனதுக்குத் தெரியாமல் என்னிடத்தில்
வேறு பொருள் உண்டோ என்றான் மன்னன்.

     கடனைக் கொடுக்கத் துணியாமல் வருந்துவதற்குக் காரணம் என்ன
என்று கேட்ட சந்திரமதியை நோக்கி 'உனக்கு தெரியாமல் நான் பொருள்
வைத்திருந்தாலன்றோ கொடுக்கமுடியும்? எப்படிக் கொடுப்பது என்றுதான்
மயங்குகிறேன்' என்று விடை கூறினன் மன்னன் என்க.
                                                    (20)

 
  'என்னையும் மகனையும் வில்' என்று சந்திரமதி கூறுதல்   
927. கல்லென்றுயர் தோளாய்கவு சிகனெண்ணுத லல்லால்
இல்லென்பது முளதென்பதும் யாமெண்ணுத றகுமோ
எல்லொன்றினி அவதித்தின மெனையும்மக னையுநீ
வில்லென்றனள் கற்புக்கொரு வித்தாகி யுதித்தாள்.

       (இ - ள்.) கல்லென்று உயர் தோளாய் - மலைபோல் உயர்ந்த
தோள்களையுடைய மன்னனே! கவுசிகன் எண்ணுதல் அல்லால் -
கவுசிகமுனிவன் எண்ணிப் பார்க்கவேண்டுமே யல்லாமல், இல் என்பதும்
உளது என்பதும் - நம்மிடத்தில் பொருள் இல்லை என்பதும் உண்டு
என்பதும், யாம் எண்ணுதல் தகுமோ - யாம் நினைத்துப் பார்த்துப் பயன்
உண்டோ, எல் ஒன்று இனி அவதித் தினம் - கெடுவு நாள் ஒன்றுதான்
இனி உள்ளது ஆதலால், எனையும் மகனையும் நீ வில் என்றனள் -
என்னையும் மகனையும் நீ விற்று விடுவாயாக என்றாள், கற்புக்கு ஒரு
வித்தாகி உதித்தாள் - கற்பிற்கு ஒரு விதைபோல உலகிற் பிறந்தவள்.

     கௌசிகன் என்பதற்குக் கவுசிகன் என்பது போலி. வில் -
(விற்பாயாக.) முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று. கற்புக்கு ஒரு வித்து
என்பது - கற்புநெறி தோன்றிப் பரவுவதற்குக் காரணமாக உலகிற்
பிறந்தவள் இவளின்றிக் கற்பில்லை என்பது கருத்து.
                                                    (21)