928. |
அவ்வாறுரை
செயமன்னவ னலையும்குறை உயிர்கொண்
டெவ்வாறுமை விலைகூறுவ லெனவெண்ணி இடைந்தான்
வெவ்வாய்வடி வேலோயெமை விலைகூறுத லரிதென்
றொவ்வாயெனின் விடுமோநம தூழின்வலி என்றாள். |
(இ
- ள்.) அவ்வாறு உரை செய - அவ்வாறு சந்திரமதி
கூறியபோது, மன்னவன் - அரிச்சந்திரன், அலையும் குறை உயிர் கொண்டு
எவ்வாறு உமை விலை கூறுவல் என எண்ணி இடைந்தான் - வருந்துகின்ற
என்னுடைய குறை உயிரை வைத்துக்கொண்டு எவ்வாறு உம்மை விலைகூறி
விற்பேன் என்று கூறி அதனை நினைத்து வருந்தினான், வெவ்வாய் வடி
வேலோய் எமை விலைகூறுதல் அரிதென்று ஒவ்வாயெனில் -
வெம்மையான கூரிய வேற்படையுடைய மன்னனே! எம்மை விலை கூறி
விற்றல் அரியது என்று நீ ஒத்துக்கொள்ளாவிடில், நமது ஊழின் வலி
விடுமோ என்றாள் - நம்முடைய பழைய வினையின் வலிமை
விட்டுவிடுமோ என்று சந்திரமதி கூறினாள்.
அரிச்சந்திரன்
'நான் எவ்வாறு உங்களை விலை கூறி விற்பேன்'
என்று கூறி வருந்தியபோது சந்திரமதி 'விதி விற்குமாறு நேர்ந்திருக்கிறதே!
அதனை மாற்றமுடியுமோ விற்றுத்தான் ஆகவேண்டும்' என்று துணிவு
கூறினள்,
(22)
929. |
தேமென்கனி
வாயாளிது செப்பச்செய லிதுவே
யாமென்றெழ வேவெள்ளியு மதுவேநல னென்றான்
மாமன்னவன் மைந்தன்றலை மிசையும்குல மடவாள்
பூமென்குழன் மிசையும்சிறு புல்வைத்து நடந்தான். |
(இ - ள்.) தேமென் கனி வாயாள்
இது செப்ப - தேன்
பொருந்திய மென்மையான கனி போன்ற வாயினை உடைய சந்திரமதி
இவ்வாறு சொன்னவுடன், செயல் இதுவேயாம் என்று எழவே -
செய்யத்தக்க செயல் இதுவேயாகும் என்று சொல்லி எழுந்தவுடன்,
வெள்ளியும் அதுவே நலன் என்றான் - சுக்கிரனும் அதுவே நன்மையான
செயல் என்றான், மா மன்னவன் மைந்தன் தலை மிசையும் - சிறந்த
மன்னவன் மைந்தனுடைய தலையின் மேலும், குல மடவாள் பூ மென்
குழல் மிசையும் - குலத்திற்பிறந்த சந்திரமதியின் பொலிவு பெற்ற மெல்லிய
கூந்தலின் மேலும், சிறு புல் வைத்து நடந்தான் - சிறு புல்லை வைத்துத்
தெருவில் நடந்தான்.
தலையில் புல் வைத்துச் சென்றது, விற்பதற்கு அறிகுறி
யெனக்
கொள்க. தெருவிற் சென்றாற் கண்டவர் என்ன காரணம் எனக் கேட்பர்,
கேட்போது இவர்களை விற்கின்றேன் என்று கூறலாம். இயற்கையாகச்
சென்றாள் வழியிற்போவார் வருவார்போலும் என வினவாது போய்விடுவர்
எல்லாரும். அதுகுறித்துப் 'புல் வைத்து நடந்தான்' என்றார். தேன் என்பது
தேம் என்று நின்ற புணர்ந்தது.
(23)
|