பக்கம் எண் :


453

            கண்டோர் கூற்று
932. சோதித்திரு முடியானிவை சொல்லச்சுடர் மாட
வீதித்தலை நின்றோர்சிலர் மிகவும்மன மழலாப்
போதிற்றிரு வனையாளிவ டனையும்புதல் வனையும்
ஏதிப்படி விலைகூறிட வெய்தும்திற மென்பார்.

     (இ - ள்.) சோதித் திரு முடியான் இவை சொல்ல - ஒளிமிக்க
அழகிய முடியையுடைய மன்னன் இவ்வாறு சொல்லியவுடன், சுடர் மாட
வீதித் தலை நின்றோர் சிலர் - ஒளிவீசும் மாடங்களிலும் தெருக்களிலும்
நின்றவர் சிலர், மிகவும் மனம் அழலா - மிகவும் மனம் கொதித்து,
போதில் திரு அனையாள் இவள் தனையும் புதல்வனையும் -
செந்தாமரைமலரில் வாழும் திருமகளைப்போன்ற இப் பெண்ணையும்
மைந்தனையும், ஏது இப்படி விலை கூறிட எய்தும் திறம் என்பார் -
என்ன காரணம் இப்படி விலைகூறுவதற்கு வந்தது என்று ஒருவருடன்
ஒருவர் பேசி நின்றனர்.

     தெருவில் நின்ற சிலர் 'திருமகள் போன்ற இவளையும் செல்வப்
புதல்வனையும் இவன் விற்பதற்குக் காரணம் யாது?' என்று ஆய்ந்து
வினவினர் ஒருவரை யொருவர் என்க.
                                                    (26)

 
933. செருவுற்றக ணயிலைப்பொரு திருஒப்பவ ளிவளும்
மருவுற்றணி தெரியற்புய மதனொப்பவன் மகனும்
ஒருவர்க்குறு விலையிற்பொரு ளுடையார்களு முளரோ
இருவர்க்குறு விலைஇப்பதி எவர்நல்குவ ரென்பார்.

       (இ - ள்.) செரு உற்ற கண் அயிலைப் பொரு திரு ஒப்பவள்
இவளும் - போருக்குரிய வேல்போன்ற கண்களையுடைய திருமகளைப்
போன்ற இவளும், மரு உற்று அணி தெரியல் புய மதன் ஒப்பவன் மகனும்
- மணம் பொருந்திய மாலை அணிந்த புயங்களையுடைய மன்மதன்
போன்ற இம்மன்னனுடைய மகனும், ஒருவர்க்கு உறு விலையிற் பொருள்
உடையார்களும் உளரோ - ஒருவர்க்குரிய விலைகொடுத்தற்குப் பொருள்
உடையவர்களும் இவ்வூரில் உளரோ, இருவர்க்கு உறு விலை இப் பதி
எவர் நல்குவர் என்பார் - இருவர்க்கும் உரிய விலை கொடுத்து
வாங்குதற்குரிய பொருள் உடையோர் இவ்வூரில் எவர் இருக்கின்றார்
என்றார்.

     இலக்குமிபோன்ற அழகுடையவள் இவள்; புதல்வனும் காமனைப்
போன்ற கட்டழகுடையவன். இவர்களில் ஒருவரை விலைக்கு வாங்கும்
பொருளுடையவர்கூட இந்நகரில் இரார். இருவரையும் எவர் வாங்குவர்
என்றும் கலந்து பேசினர் சிலர் என்பது.
                                                    (27)

 
934. தவருக்கல தயிராவத மெனுநீள்கர சைலத்
தவருக்கல தளகாபுரி அரசுக்கல தலைசேர்
உவரிக்கடல் புடைசூழ்விய னுலகத்திடை உறுவார்
எவருக்கெளி திவருக்குறு விலைநல்குவ தென்பார்.