பக்கம் எண் :


456

     வெருவில் அந்தணன் என்றது உண்மை மறையோன் ஆயின்
அஞ்சுவன்; வஞ்சகமாக வந்த மறையோன் ஆதலாற் சிறிதும் அச்சமின்றி
உச்சக்குரலிற் பேசினன் என்பதை விளக்கிற்று.
                                                    (32)

 
939. உண்ம கிழ்ந்தின் றளிக்கு முறுபொருள்
கொண்மர் தம்மை அழைஎனக் கூறினன்
வெண்ம னத்தனென் வெள்ளியைக் கூவியந்
நுண்ம றைக்குலத் தோன்முக நோக்கியே.

       (இ - ள்.) உள் மகிழ்ந்து இன்று அளிக்கும் உறு பொருள் -
மனம் மகிழ்ந்து இன்று கொடுக்கும் மிக்க பொருளை, கொண்மர் தம்மை
அழை எனக் கூறினன் - பெற்றுக்கொள்ளுகின்றவரை அழை என்று
கூறினான், வெண் மனத்தன் என் வெள்ளியைக் கூவி - வெள்ளையான
மனத்தை உடையவன் எனப்படும் வெள்ளியைக் கூப்பிட்டு, அந் நுண்
மறைக் குலத்தோன் முகம் நோக்கி - அந்த நுட்பமான
மறைக்குலத்தவனுடைய முகத்தைப் பார்த்து.

     இது குளகம். அடுத்த கவியில் "இவர் தமக்கு அளி என்றலும்"
என்று கூட்டுக. 'முகம் நோக்கி என்றலும் அவன் கைறைந்தான்' என
முடியும்.
                                                    (33)

 
940. இவர்த மக்களி என்றலு மீவனென்
றவர்த மக்கவ னங்கை யறைந்தனன்
உவரி சூழ்புவி மன்னவ னுற்றுநீர்
கவரு மாநிதி கைபுக்க தோவென்றான்.

     (இ - ள்.) இவர் தமக்கு அளி என்றலும் - இவரிடத்தில்
பொருளைக்கொடு என்றவுடன், ஈவன் என்று அவர் தமக்கு அங்கை
அறைந்தனன் - கொடுப்பேன் என்று சொல்லி அவ்வெள்ளியினுடைய
கையில் அடித்துக் கொடுத்தான், உவரி சூழ் புவி மன்னவன் உற்று -
கடலாற் சூழப்பெற்ற மாநிலத்தை யாண்ட அரிச்சந்திரமன்னன் அவனைப்
பார்த்து, நீ்ர் கவரும் மாநிதி புக்கதோ என்றான் - நீர் பெற்றுக்
கொள்ளவேண்டிய பொருளைக் கையிற் பெற்றுக்கொண்டீரோ என்று
கேட்டான்.

     கையறைதல் - கொடுத்ததற்கு அறிகுறி எனக் கொள்க. 'உனக்குக்
கொடுக்கிறேன்; நீ பெற்றுக்கொள்; இது உறுதி' என்ற கூறியதாகும்.
                                                    (34)

 
   ஆவணம் வரைந்து அந்தணற்களித்தல்   
941. வந்த தென்பொருண் மாதையும் சேயையும்
அந்த ணற்களித் தாவண நல்கென
முந்த ஆவணம் தீட்டி முடிந்தபின்
மைந்த னோடு மயிலை வழங்கினான்.