பக்கம் எண் :


460

     கோட்டம் - வளைவு, மனமாறுதல், அறியாமை, வாட்டம் - கவலை.
எந்து - என்ன; இஃது வேற்றுமொழி. புந்தி இல்லவர் - அறிவில்லாதவர்.
                                                    (42)

 
949. அந்த ணன்முக நோக்கி அரும்பொருள்
வந்த தோவென்று மன்னன் விளம்பயான்
இந்த மாநிதி பெற்றனன் இன்னமும்
சிந்தை யோடுரை செய்வதொன் றுண்டென்றான்.

       (இ - ள்.) அந்தணன் முகம் நோக்கி அரும் பொருள் வந்ததோ
என்ற மன்னன் விளம்ப - வெள்ளி என்னும் அந்தணனுடைய முகத்தைப்
பார்த்து உனக்கு வரவேண்டிய பொருள் வந்துவிட்டதோ என்று அரசன்
கேட்க, யான் இந்த மாநிதி பெற்றனன் - யான் இந்தச் செல்வத்தைப்
பெற்றுக்கொண்டேன். இன்னமும் சிந்தை யோடு உரை செய்வது ஒன்று
உண்டென்றான் - இன்னமும் மனத்தால் நினைத்துச் சொல்லவேண்டியது
ஒன்று இருக்கிறது என்றான்.

     கோசிகனுக்கு நீ தரவேண்டிய பொருளைப் பெற்றுக்கொண்டேன்;
நான் கூறவேண்டிய செய்தி யொன்றுள்ளது என்று வெள்ளி கூறுகின்றான்
என்பது.
                                                    (43)

 
  சுக்கிரன் 'எனக்குக் கூலி கொடு' என்றல்
950. முனிக்கு முன்ன மொழிந்தபொ னீந்தனை
எனக்குக் கூலிநீ யீகுவ தென்னென
உனக்கு மீகுவன் வாவென உத்தமன்
றனக்குப் பின்னடந் தான்வினைச் சல்லியன்.

     (இ - ள்.) முனிக்கு முன்னம் மொழிந்த பொன் ஈந்தனை -
முனிவனுக்கு முன்னே சொன்னபடி பொன் கொடுத்தாய், எனக்குக் கூலி
நீ ஈவது என் என - எனக்குக் கூலியாக நீ கொடுக்கவேண்டிய பொருள்
யாது என்று கேட்க, உனக்கும் ஈகுவன் வா என - உனக்கும் கொடுப்பேன்
வா என்று மன்னன் சொல்ல, உத்தமன் தனக்குப் பின் நடந்தான் வினைச்
சல்லியன் - கொடுஞ்செயலையுடைய வெள்ளி நல்லோனாகிய மன்னனுக்குப்
பின்னால் நடந்து சென்றான்.

     வெள்ளி 'எனக்குக் கூலி நீ கொடு' என்றான்; வேந்தன் 'நல்லது;
உனக்கும் கூலி தருகிறேன்; என் பின் வா' என்று கூட்டிச் சென்றான்
என்பது.
                                                    (44)

  மன்னனும் மந்திரியும் ஒருவரையொருவர் விற்குமாறு
            கூறி உரையாடல்
  
951. அன்ன காலை அமைச்சனை நோக்கியே
என்னை நீவிற் றிவற்குப்பொ னீகெனாச்
சொன்ன போதிற் றுணுக்கென வேங்கியெம்
மன்ன கேளென மந்திரி கூறுவான்.