பக்கம் எண் :


469

     (இ - ள்.) பாடையிற் கொணர்ந்து வைத்த பிணஞ் சுடு பணமும்
- பிணஞ்சுடுவதற்காகப் பாடையிலே கொண்டுவந்து வைத்த பணமும்,
கொள்ளி ஆடையும் - கொள்ளி வைப்போர் கொடுக்கும் ஆடையும்,
வாங்கி ஈட்டி ஆண் தகைக்கு அளித்து அங்கு உற்று - வாங்கிச் சேர்த்து
ஆண்தன்மையுடைய வீரவாகுவுக்கு அளித்து அங்குத் தங்கி, நாளும்
கொடுத்த வாய்க்கரிசி கூடையின் நிறைத்து வைத்து - நாள்தோறும்
கொடுத்த வாய்க்கரிசியைக் கூடையில் நிறைத்து வைத்து, ஓடை மாக்
களிற்று மன்னன் உறைந்தனன் உறைந்த பின்னர் - முகபடாத்தை அணிந்த
யானைப்படையை உடைய மன்னன் தங்கியிருந்தான்; அவ்வாறு தங்கிய
அக்காலத்தில் (நிகழ்ந்தது கூறுகின்றேன்) என்பது குறிப்பு.

     ஆண்டகை என்பது தலைவனை யுணர்த்தியது. அரிச்சந்திரன்
வாழ்க்கைநிலை கூறினர். ஒவ்வொரு நாளும் ஆடையும் பணமும் தன்
தலைவனுக்குக் கொடுத்துவிட்டு வாய்க்கரிசியை வாங்கிக்
கூடையினிரப்பிவைத்து வாழ்ந்தான் என்பது.
                                                    (64)

 
971. அத்திரு நகரின் மற்றோ ரம்பலத் திரவு தங்கிச்
சத்திய கீர்த்தி என்பான் றங்கணா யகனைத் தேடிப்
புத்தியில் வருத்த நண்ணிப் புலைக்குடி லருகு தேடி
உத்தம னீமங் காக்கு மாறுகேட் டோடிச் சென்றான்.

       (இ - ள்.) அத் திரு நகரின் மற்றோர் அம்பலத்து இரவு
தங்கி - அந்த அழகிய காசி நகரத்தில் ஓர் அறச் சாலையில்
இரவுநேரத்தில் தங்கி, சத்தியகீர்த்தி என்பான் - சத்தியகீர்த்தி என்னும்
பெயருடைய அமைச்சன், தங்கள் நாயகனைத் தேடி - தங்கள்
தலைவனாகிய மன்னனைத் தேடிக்கொண்டு, புத்தியில் வருத்தம் நண்ணி
- மனக்கவலை கொண்டு, புலைக் குடில் அருகு தேடி - அந்தப் புலையர்
குடிலின் அருகிலே வந்து தேடி, உத்தமன் ஈமங் காக்குமாறு கேட்டு -
சிறந்த அரிச்சந்திரன் சுடலை காக்கின்ற செய்தி கேட்டு, ஓடிச் சென்றான்
- விரைந்து சென்றான்.

     சத்தியகீர்த்தி ஒருநாள் இரவு ஒரு சத்திரத்தில் தங்கியிருந்து பகலில்
அரசனைத் தேடிவந்தான். அங்குள்ளவர்கள் சுடுகாட்டில் இருக்கிறான்
என்று சொல்லக் கேட்டு அவ்விடத்திற்குச் சென்றான்.
                                                    (65)

 
  அரிச்சந்திரனைச் சத்தியகீர்த்தி மீண்டும் வந்து காண்டல்   
972. நெருப்பெழுந் தெரியும் செந்தீச் சுடுகரை நீந்தி யேகி
மருப்பயி லலங்கன் மன்னை மந்திரித் தலைவ னண்மிச்
செருப்பயில் வீர வேலான் சிறுகுடி றனிலே புக்கங்
கிருப்பது கண்டான் காணா வேங்கியே அலறி வீழ்ந்தான்.

     (இ - ள்.) நெருப்பு எழுந்து எரியும் செந்தீச் சுடுகரை நீந்தி ஏகி -
நெருப்பு எழுந்து எரிகின்ற செந்தீயையுடைய சுடுகரையை விட்டுக் கடந்து
சென்று, மரு பயில் அலங்கல் மன்னனை மந்திரித் தலைவன் அண்மி -
மணம் வீசும் மாலை அணிந்த மன்னனை மந்திரித் தலைவனாகிய