பக்கம் எண் :


470

சத்தியகீர்த்தி நெருங்கி, செரு பயில் வீர வேலான் சிறு குடில் தனிலே
புக்கு அங்கு இருப்பது கண்டான் - போருக்குரிய வீரவேல் கொண்ட
மன்னன் சிறு குடிலிலே புகுந்து அங்கு இருப்பதைக் கண்டான், காணா
ஏங்கியே அலறி வீழ்ந்தான் - கண்டு ஏங்கி அலறி அமைச்சன் விழுந்தான்.

     மந்திரி சுடுகாட்டையடைந்து மன்னனைச் சிறுகுடிலிற் கண்டான்.
நிலைமை கண்டு பெருமூச்சு விட்டு வருந்தினான் என்க. காணா - கண்டு.
'மருப்பயி லலங்கன் மார்பன்' என்றார், மன்னன் முன்னிருந்த சிறப்பை
யுணர்த்துதற்கு.
                                                    (66)

            சத்தியகீர்த்தி புலம்பல்  
973. மன்னவ ரிடம்பொ றாது வந்துசூழ்ந் திறைஞ்சிப் போற்ற
அன்னமென் னடையார் ஆட அரம்பையர் பாட வைகும்
பொன்னெடுங் கோயில் நீங்கிப் பூதமும் பிசாசும் ஆடும்
இந்நெடுங் கோயி லோவந் தெய்திய தைய வென்றான்.

       (இ - ள்.) மன்னவர் இடம் பொறாது வந்து சூழ்ந்து இறைஞ்சிப்
போற்ற - மன்னர்கள் தமக்கு இடம் கிடைக்கப்பெறாமல் வந்து
சூழ்ந்துகொண்டு வணங்கிப் போற்றவும், அன்னம் மென் நடையார் ஆட
- அன்னம் போன்ற மெல்லிய நடையுடைய பெண்கள் ஆடவும்,
அரம்பையர் பாட - அரம்பை மாதர் பாடவும், வைகும் - தங்கியிருக்கின்ற,
பொன் நெடுங் கோயில் நீங்கி - பொன் மயமான பெரிய கோயிலை விட்டு
நீங்கி, பூதமும் பிசாசும் ஆடும் இந் நெடுங் கோயிலே வந்து எய்தியது ஐய
என்றான் - பூதமும் பிசாசும் ஆடுகின்ற இந்தப் பெரிய கோயிலோ உமக்கு
இப்பொழுது வந்து கிடைத்தது என்று கூறினான்.

     சத்தியகீர்த்தி கண்டான் அரிச்சந்திரன் நிலைமையை. 'மாதர் ஆடல்
பாடல்களுடன் அரண்மனையில் வீற்றிருந்த உனக்குப் பேயும் பூதமும்
ஆடிப் பிணந்தின்னும் சுடுகாடு இப்போது கிடைத்ததோ!, என்று கூறி
வருந்தினான். அரம்பையர் என்பது உவமையாகுபெயர். மண்ணுலகப்
பெண்களையே குறித்ததெனக் கொள்க.
                                                    (67)

 
          அரசன் மந்திரியைத் தேற்றுதல்
974. கதிதரும் அயனும் மாலும் கடக்கருங் கொடிய நீர்மை
விதியினை எளிய நம்மால் வெல்லலாம் தகைமைத் துண்டோ
அதிகம்வந் தெய்தா மேனா ளமைத்தவே யடுக்கு மல்லால்
மதிவலொ யிதற்கு வாடி வருந்தலை என்று சொன்னான்.

     (இ - ள்.) கதி தரும் அயனும் மாலும் கடக்க அரும் கொடிய
நீர்மை - பிறப்பினையும் பதவிகளையும் தருகின்ற பிரமதேவனும்
திருமாலும் வெல்லுதற்கரிய தன்மையுடைய, விதியினை எளிய நம்மால்
வெல்லலாம் தகைமைத்து உண்டோ - விதியை எளிய நாம் வெல்லுதற்கு
வல்லமை உடையோமோ, மேனாள் அமைத்தவே அடுக்கும் அல்லால் -
முன்னாளில் நமக்கென்று விதிக்கப்பட்ட அளவே இன்பதுன்பம் வந்து
சேரும் அல்லாமல், அதிகம் வந்து எய்தா - நம்மிடத்தில் அதிகமாக
ஒன்றும் வந்து சேராது,