பக்கம் எண் :


475

தெறித்து அழல் விழியாற் சிந்த தீண்டிற்று - கண்களில் நெருப்புப்பொறி
தெறிக்கும்படி தீண்டியது, தீண்டலொடும் - தீண்டியவுடன், வெறித்தெழுந்து
அலறி ஓடி வெருவியே தரையில் வீழ்ந்தான் - மயங்கி எழுந்து அலறி ஓடி
அஞ்சித் தரையில் விழுந்தான்.

     தேவதாசன் தருப்பை கொய்தபோது அதனுள்ளிருந்த பாம்பு
அவனைக் கடித்தது; மயங்கி விழுந்தான். அப் பாம்பு விசுவாமித்திரனால்
விடுக்கப்பட்டது. கோள் - கொலை.
                                                     (6)

 
983. வடத்தின்கீ ழிருந்த தோழர் மறுகிப்போய் வள்ளல் வீழ்ந்த
இடத்தினை அணுகி யையோ வென்னுற்ற துரையா யென்னப்
படத்தினாற் பெரிய நாகம் கடித்தது பாரு மென்று
விடத்தினா லறிவு சோர்ந்தான் லிட்டுயி ரடங்கிற் றன்றே.

       (இ - ள்.) வடத்தின் கீழ் இருந்த தோழர் மறுகிப் போய் -
ஆலமரத்தின் அடியில் தங்கியிருந்த தோழர்கள் மயங்கிச் சென்று,
வள்ளல் வீழ்ந்த இடத்தினை அணுகி ஐயோ என் உற்றது உரையாய் என்ன
- மன்னன் மைந்தன் வீழ்ந்த இடத்தை நெருங்கி ஐயோ என்ன நேர்ந்தது
உரைப்பாய் என்றவுடன், படத்தினாற்பெரிய நாகம் கடித்தது பாரும் என்று
- படத்தொடு கூடிய பெரிய நாகம் கடித்துவிட்து பாருங்கள் என்று,
விடத்தினால் அறிவு சோர்ந்தான் விட்டு உயிர் அடங்கிற்று அன்றே -
விடத்தினாலே அறிவு சோர்ந்து மயங்கி விழுந்தான்; அவன் உடம்பை
விட்டு உயிரும் நீங்கியது.

     ஆலமரத்தின்கீழ் அமர்ந்திருந்த தோழர் ஓடிப்போய்ப் பார்த்தனர்;
தேவதாசன் 'என்னைப் பாம்பு கடித்துவிட்டது; பாருங்கள்' என்று
காட்டினான்; உடனே மயக்கம் உண்டாகி அவன் உயிர் நீங்கியது என்க.
                                                     (7)

 
     தேவதாசன் இறந்ததை யறிந்து உடன்வந்த சிறார்
              ஊருக்குச் செல்லுதல்
  
984. ஆவிபோ யகன்ற பின்னை அனைவரும் புரட்டிப் பார்த்துப்
பாவியூ ழென்னே இந்தப் பாலக னிறந்தா னென்னா
மேவியவ் வடத்தின் கீழ்வந் தவரவர் விறகு கொண்டு
காவியம் கழனி சூழும் காசியம் பதியிற் புக்கார்.

     (இ - ள்.) ஆவி போய் அகன்ற பின்னை - உயிர் நீங்கிப்போன
பிறகு, அனைவரும் புரட்டிப் பார்த்து - எல்லோரும் புரட்டிப் பார்த்து
விட்டு, பாவி ஊழ் என்னே இந்தப் பாலகன் இறந்தான் என்னா -
பாவியாகிய தீய ஊழ்வினையால் இந்தப் பாலகன் இறந்துவிட்டானே என்று,
மேவி அவ்வடத்தின்கீழ் வந்து அவரவர் விறகு கொண்டு - நிலைத்து அந்த
ஆலமரத்தின்கீழே வந்து அவரவருடைய விறகை எடுத்துக்கொண்டு, காவி
அம் கழனி சூழும் காசி அம் பதியிற் புக்கார் - நீலமலர்கள் நிறைந்த
வயல்களால் சூழப்பெற்ற காசிமாநகரத்தை அடைந்தனர்.