பக்கம் எண் :


476

     உடன்வந்த சிறார்கள் உயிர் நீங்கியது கண்டார்; பின்னும் புரட்டி
உருட்டிப் பார்த்தனர். உயிரில்லை என்றுணர்ந்து விதியை நொந்து
விறகுக்கட்டுகளை எடுத்துச் சுமந்து அவரவர் வீடுநோக்கிச் சென்றனர்
என்பது.
                                                     (8)

 
985. பாலர்வந் தூரிற் புக்கார் பானுவும் கடலிற் புக்கான்
மாலைவந் திறுத்த பின்னர் வழியினை நோக்கி அன்னை
பாலன்வந் திலனென் றேங்கிப் பரதவித் திருகண் டாரை
காலநொந் துருவி வாயிற் கடைத்தலை வந்து பார்த்தாள்.

       (இ - ள்.) பாலர் வந்து ஊரில் புக்கார் - உடன் சென்ற
சிறுவர்கள் வந்து ஊரிலே புகுந்தார்கள், பானுவும் கடலிற் புக்கான் -
கதிரவனும் மேல்கடலிற் புகுந்தான், மாலை வந்து இறுத்த பின்னர்
அன்னை வழியினை நோக்கி - மாலைக்காலம் வந்து சேர்ந்தபிறகு
தாயாகிய சந்திரமதி வழியைப் பார்த்து, பாலன் வந்திலன் என்று ஏங்கிப்
பரதவித்து - சிறுவன் மைந்தன் வரவில்லையே என்று ஏக்கங் கொண்டு
மனம் தடுமாறி, இரு கண் தாரை கால நொந்து உருகி - இரண்டு
கண்களினின்றும் தாரைதாரையாகக் கண்ணீர் சிந்த மனம் வருந்தி உருகி,
வாயில் கடைத்தலை வந்து பார்த்தாள் - வாயிலின் முன் பக்கம் வந்து
பார்த்தாள்.

     'மாலையில் வரவேண்டிய பாலன் இன்னும் வரவில்லையே!' என்று
சந்திரமதி மயங்கித் தெருவில் வந்து சிறார் வருவாரை நோக்கி நின்றாள்
என்க; கண் + தாரை = கண்டாரை, கண் தாரை. கால - கண்கள்
மழைத்தாரை போல நீர் சிந்த. தலை - முன்னிடம்.
                                                     (9)

 
   மைந்தனிறந்ததை வந்த சிறார் சந்திரதிக்குச் கூறல்   
986. வணங்கிய கரத்தாள் சால வாடிய மனத்தாள் மக்காள்
இணங்கியும் முடனே வந்த வென்மக னெங்கே என்றாள்
மணங்கமழ் குழலா யுன்றன் மைந்தனை அரவு தீண்டி
உணங்கியே இறந்தா னென்றா ருயிர்த்திலண் மறுகி வீழ்ந்தாள்.

     (இ - ள்.) வணங்கிய கரத்தாள் - தளர்ந்த கைகளையுடையவள்,
சால வாடிய மனத்தாள் - மிகவும் வாடிய மனத்தை யுடையவள், மக்காள்
இணங்கி உம்முடனே வந்த என் மகன் எங்கே என்றாள் - பிள்ளைகளே
உம்முடனே சேர்ந்து வந்த என் மகன் எங்கே என்றாள், மணம் கமழ்
குழலாய் உன்றன் மைந்தனை அரவு தீண்டி - மணம் வீசும்
கூந்தலையுடைய பெண்ணே! உன் மகனைப் பாம்பு கடித்து, உணங்கியே
இறந்தான் என்றார் - வருந்தி இறந்தான் என்றனர், உயிர்த்திலள் மறுகி
வீழ்ந்தாள் - மூச்சும் விடாதவளாய் மயங்கி அவள் விழுந்தாள்.

     சிறார்களைக் கண்டாள்; கைகுவித்து வணங்கி மனம் வாடி
'உங்களுடன் வந்த என் மகன் எங்கே?' என்று வினவினள். அவர்கள்
'உன் மகனை அரவு தீண்டிற்று; ஆவி நீங்கிற்று, நாங்கள் போட்டுவிட்டு
வந்தோம்' என்றனர். கேட்டவுடன் மயங்கி விழுந்தாள்.
                                                    (10)