பக்கம் எண் :


478

இறைவகே ளரவந் தீண்டி என்மக னிறந்தான் யானச்
சிறையிலே சேறற் குன்றன் றிருவுள மறியேன் என்றாள்.

     (இ - ள்.) பணிகள் எல்லாம் முறை முறை செய்து அற முடித்து -
வேலைகளையெல்லாம் முறைமைப்படி செய்து முழுவதும் முடித்து, பின்னர்
மறையவன் தன்னை ஏத்தி - பிறகு வீட்டின் தலைவனாகிய மறையவனை
வாழ்த்தி, வாய் புதைத்து அழுது விம்மி - வாய்மூடி அழுது விம்முதல்
செய்து, இறைவ கேள் அரவம் தீண்ட என் மகன் இறந்தான் - தலைவனே
கேள்! பாம்பு கடித்து என் மகன் இறந்து கிடக்கின்றான், யான் அச்
சிறையிலே சேறற்கு உன்றன் திருவுளம் அறியேன் என்றாள் - யான் அப்
பகுதியில் செல்வதற்கு உன்னுடைய மனக்கருத்து அறியவேண்டும் என்றாள்.

     'அற முடித்து' என்பது ஒரு வேலையும் இன்றி எல்லாவற்றையும்
முடித்து என்ற பொருளைத் தந்தது. சிறை - பக்கம் மறையவனை
முதலிற்றுதித்துப் பின் வணங்கி வாய் பொத்தி யழுது விம்மிக் கூறினள்,
'ஒருவேளை மறுத்துக் கூறின் என்செய்வது' என்ற கவலையினால் எனக்
கொள்க.
                                                    (13)

 
           மறையோன் மறுத்தல்
990. சினக்கடும் சொல்லாற் சீறித் திடுக்கிட உரப்பி வீணி
எனக்குறு குறையே அன்றி என்பொருட் கழிவு வந்தால்
உனக்குறு குறைதா னுண்டோ உறுவிலைப் பட்ட பையல்
தனக்கொரு தாயும் உண்டோ தவிர்கநீ போவ தென்றான்.

       (இ - ள்.) சினக் கடும் சொல்லாற் சீறி திடுக்கிட உரப்பி -
மறையவன் சினம் கொண்டு கடுஞ்சொற்களால் சீறி அவள் திடுக்கிடும்படி
குரலிட்டு, வீணி - பயன் இல்லாதவளே!, என் பொருட்கு அழிவு வந்தால்
எனக்கு உறு குறையே அன்றி உனக்கு உறு குறைதான் உண்டோ -
என்னுடைய பொருளுக்கு அழிவு வந்ததானால் எனக்கு நேர்ந்த குறையே
அல்லாமல் உனக்கு நேர்ந்த குறை ஆகுமோ?, உறு விலைப் பட்ட பையல்
தனக்கு ஒரு தாயும் உண்டோ - மிகுந்த விலை கொடுத்து வாங்கப்பட்ட
பையன் ஆதலால் அவனுக்கு ஒரு தாயும் உண்டோ, நீ போவது தவிர்க
என்றான் - நீ அங்கே போவதை விட்டு விடுக என்றான்.

     சந்திரமதி குறை கேட்ட மறையவன் மிகச் சினந்து, 'என் பொருள்
தொலைந்ததற்கு நான் வருந்தவேண்டியதிருக்க, நீ வருந்தவேண்டிய
நிலைமை என்ன? நீ அங்குப் போகவேண்டுவதில்லை' என்றான்.
                                                    (14)

 
            மீண்டும் விடை கேட்டல்
991. அடிமையே எனினு மையா வந்தரத் திறந்தா னென்றாற்
கொடியனேன் றனக்குப் பெற்ற வயிறுதான் கொதித்தி டாதோ
படியின்மேல் இறந்தான் றன்னைப் பார்த்தெடுத் தடக்கிக்                                            கங்குல்
விடியுமுன் வருவே னல்கு விடைஎனத் தொழுது வீழ்ந்தாள்.