பக்கம் எண் :


479

     (இ - ள்.) அடிமையே எனினும் ஐயா அந்தரத்து இறந்தான்
என்றால் - நான் அடிமையே என்றாலும் ஐயனே! யாருமில்லாத வனத்தில
இறந்துகிடக்கின்றான் என்றால், கொடியனேன் தனக்குப் பெற்ற வயிறுதான்
கொதித்திடாதோ - கொடிய பாவியாகிய எனக்குப் பெற்ற வயிறு
கொதிக்காதோ!, படியின்மேல் இறந்தான் தன்னைப் பார்த்து எடுத்து
அடக்கி - தரையிலே இறந்துகிடக்கின்றவனைப் பார்த்து எடுத்து
அடக்கஞ்செய்துவிட்டு, கங்கல் விடியுமுன் வருவேன் நல்கு விடை எனத்
தொழுது வீழ்ந்தாள் - இராப்பொழுது விடிவதற்கு முன் வருவேன்
விடைகொடு என்று வணங்கி வீழ்ந்தாள்.

     'ஐயனே! நான் அடிமை; என் மைந்தனும் அடிமை என்றாலும்
தனியே வனத்திலிறந்து கிடக்கின்றான் என்றால் என் மனம்
கொதிக்குமல்லவா? தாயின் நிலைமை தெரியாமல் இவ்வாறு கூறலாமா?
அடக்கஞ்செய்து வருகிறேன்; விடை தருக' என்று மீண்டும் காலில்
விழுந்தாள்.
                                                    (15)

 
  மறையோன் விடைபெற்றுச் சந்திரமதி வனம் போதல்   
992. மாலையங் குழலாள் கூற மறையவன் மனம்பொ ருந்தி
வேலைகண் மிகவு முண்டு விடியுமுன் வருவா யாகில்
நீலவேல் விழியா யேகு நீயென ஒருகாற் சொன்ன
காலையே எழுந்தி ருந்து கடிநகர் கடந்து போனாள்.

       (இ - ள்.) மாலை அம் குழலாள் கூற மறையவன்
மனம்பொருந்தி - மாலை அணிந்த கூந்தலையுடைய சந்திரமதி கூறியவுடன்
மறையவன் மனம் ஒத்து, வேலைகள் மிகவும் உண்டு விடியுமுன்
வருவாயாகில் - இங்கு வீட்டு வேலைகள் மிகுதியாக இருக்கின்றன,
பொழுது விடிவிதற்குமுன் நீ வருவாயானால், நீல வேல் விழியாய் ஏகு நீ
என - நீல மலரும் வேலும் போன்ற கண்களையுடையவளே! நீ செல்
என்று, ஒருகால் சொன்ன காலையே - ஒருதடவை சொன்ன உடனே,
எழுந்திருந்து கடி நகர் கடந்து போனாள் - எழுந்து காவலோடு கூடிய
நகரத்தைக் கடந்து அவள் சென்றாள்.

     மறையவன் மனமிரங்கி விடை தந்தான், உடனே புறப்பட்டு
நகரத்தைக் கடந்து காரிருளிற் றனிவழியே சென்றனள் சந்திரமதி.
                                                    (16)

 
        இறந்த மைந்தனைத் தேடி இடர்ப்படுதல்   
993. பாவியேன் மகனே என்பள் பதைப்பள்மென் முகத்தின் மோதித்
தாவியே விழுவள் நின்று தயங்கியே மயங்கி வீழ்வாள்
காவியம் கண்ணீர் பாயக் கதறுவள் பதறி ஏங்கி
ஆவியைத் தேடித் தேடி அலமரும் உடல மொத்தாள்.

     (இ - ள்.) பாவியேன் மகனே என்பள் பதைப்பள் - பாவியாகிய
என் மகனே என்பாள் மனம் துடிப்பாள், மென் முகத்தின் மோதித்
தாவியே விழுவள் - மென்மையான முகத்திலே மோதிக்கொண்டு தாவி
விழுவாள்;