பக்கம் எண் :


481

உடலைத் தேடினாள், கழுகும் பேயும் நரிகளும் குறளும் துன்றிக் கூடிய -
கழுகுகளும் பேய்களும் நரிகளும் சிறு குறட்பேய்களும் நெருங்கிக்கூடிய
குழுவின் நாப்பண் குமரனைச் சென்று கண்டாள் - கூட்டத்தின் நடுவிலே
மைந்தனைச் சென்று கண்டாள்.

     குறள் - குட்டிப் பேய்; பேய் வகையுள் ஒன்று. குறிப்பாக
ஆலமரத்திற்கு வடக்கிற் சென்று கண்டாள் மகனுடம்பை. கழுகுகளும்
பேய்களும் நரிகளும் குறட்பேய்களும் கூடிப் பிணந்தின்னக் காத்துக்
கொண்டிருப்பன கண்டாள்.
                                                    (19)

 
996. கண்டனள் கதறி வீழ்ந்தாள் கழுகெலாம் இரியல் போகக்
கொண்டதோர் மகவி னாசை ஆவியைக் கொள்ளை கொள்ள
முண்டகக் கரத்தால் ஏந்தி முருகனை மடிமேல் வைத்து
அண்டரும் மறுகி ஏங்க வாய்திறந் தரற்ற லுற்றாள்.

       (இ - ள்.) கண்டனள் கழுகெலாம் இரியல் போக கதறி
வீழ்ந்தாள் - சந்திரமதி பார்த்தாள் கழுகு முதலியன அஞ்சி ஓடும்படி
கதறி விழுந்தாள், கொண்டது ஓர் மகவின் ஆசை ஆவியைக் கொள்ளை
கொள்ள - பிள்ளையின்மேல் தான் கொண்ட ஆசை தன் உயிரைக்
கொள்ளை கொள்ளும்படி, முருகன் முண்டகக் கரத்தால் ஏந்தி மடி மேல்
வைத்தே - அழகனாகிய மைந்தனைத் தன் தாமரை மலர்போன்ற கைகளில்
ஏந்தி மடிமேல் வைத்துக்கொண்டு, அண்டரும் மறுகி ஏங்க வாய் திறந்து
அரற்றல் உற்றாள் - தேவர்களும் மயங்கி வருந்தும்படி வாயைத் திறந்து
அழத் தொடங்கினாள்.

     கூடியிருந்த கழுகு முதலியவை அஞ்சி யோடும்படி
கதறியோலமிட்டுப் பிணத்தின்மேல் வீழ்ந்தாள்; பின் கையில் எடுத்து
வைத்துப் புலம்புகின்றாள். வானவரும் அவள் புலம்புவது கண்டு வருந்திப்
பெருமூச்சுவிட்டனர் என்பது.
                                                    (20)

 
            சந்திரமதி புலம்புதல்

  எழுசீர்க் கழிநெடிலடிச் சந்த விருத்தம்
  
997. பனியா னனைந்து வெயிலால் உலர்ந்து
   பசியா லலைந்து முலவா
அனியாய வெங்க ணரவா லிறந்த
   அதிபாவ மென்கொ லறியேன்
றனியே கிடந்து விடநோய் செறிந்து
   தரைமீ துருண்ட மகனே
இனியாரை நம்பி உயிர்வாழ்வ மென்ற
   னிறையோனும் யானு மவமே.

     (இ - ள்.) பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து - பனியினால்
நனைந்து வெயிலினால் காய்ந்து, பசியால் அலைந்தும் உலவா - பசியால்
வருந்தியும் இறவாமல், அனியாய வெங்கண் அரவால் இறந்த - கொடுமை