மிக்க கண்களோடு
கூடிய பாம்பினால் இறந்த, அதி பாவம் என்கொல்
அறியேன் - மிக்க பாவம் யாதோ யான் அறியேன், தனியே கிடந்து -
தனியிடத்திலே கிடந்து, விட நோய் செறிந்து - விடம் மிகுந்த, தரைமீது
உருண்ட மகனே - தரையின்மேல் உருண்டு இறந்த மகனே!, என்றன்
இறையோனும் யானும் அவமே இனி யாரை நம்பி உயிர் வாழ்வம் - என்
தலைவனாகிய மன்னனும் யானும் இனிமேல் யாரை நம்பி உயிர் வாழ்வோம்
(என்று புலம்பினாள் சந்திரமதி.)
'மகனே
! நீ எங்களுடன் பாலைவனத்து வழியாகவும், சோலைக்
கானகத்து வழியாகவும் நடந்து வந்தனை! அப்பொழுது பனியாற் குளிருற்று
நடுங்கினை! வெயிலாற் சுடப்பட்டு வெம்பினை! பசியாற் களைத்து
விழுந்தனை! அப்போதெல்லாம் பிழைத்திருந்த நீ இப்போது பாம்பின்
வாயகப்பட்டு இறந்தனை! நான் என்ன பாவஞ்செய்தேனோ அறியேன்! இது
கொடிய பாவம்!' என்று புலம்பினாள். இது இயற்கைச் சாவு அன்று;
இடையே வந்த சாவு; காரணம் அறியேன் என்பது கருத்து.
(21)
998. |
நிறை
யோசை பெற்ற பறையோசை யற்று
நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை யற்ற செடியூ டிறக்க
விதியா ரிழைத்த செயலோ
மறையோ னிரக்க வளநாட னைத்தும்
வழுவா தளித்த வடிவேல்
இறையோ னளித்த மகனே உனக்கு
மிதுவோ விதித்த விதியே.
|
(இ
- ள்.) நிறை ஓசை பெற்ற மறை ஓசை அற்று - மிகுந்த ஓசை
பெற்ற பறையின் ஓசை இல்லாமல், நிரையாய் நிறைந்த கழுகின் -
வரிசையாய் நிறைந்த கழுகினுடைய, சிறை ஓசை உற்ற செடியூடு இறக்க -
சிறகின் ஓசை கொண்ட செடியின் இடையிலே இறக்கும்படி, விதி யார்
இழைத்த செயலோ - விதியார் செய்த கொடுஞ்செயலோ, மறையோன்
இரக்க வளநாடு அனைத்தும் வழுவாது அளித்த - விசுவாமித்திர
முனிவனாகிய மறையவன் இரந்து கேட்டபோது தன் வளமான நாடு
முழுவதும் சிறிதும் தவறாது அளித்த, வடிவேல் இறையோன் அளித்த
மகனே - கூர்மையான வேலைப்பிடித்த மன்னன் பெற்றெடுத்த மகனே!,
உனக்கும் இதுவோ விதித்த விதியே - அயன் உனக்கு விதித்த விதி
இதுதானோ? (என்று புலம்பினள் சந்திரமதி.)
'மறையோ னிரக்க . . . . . . அளித்த வடிவேல் இறையோன்'
என்றது, அரிச்சந்திரன் வாய்மையையும் வண்மையையும் குறித்ததாம்.
'இத்துணைப் பெருஞ்சிறப்பு வாய்ந்த மன்னர்க்கு மன்னன் பெற்ற புதல்வன்
இறந்து தனியே வனத்தில் கழுகுகளின் சிறையோசை மிக்க செடிகளின்
கீழ்க் கிடக்கக் கண்டது என்ன தீவினையோ?' என்று புலம்பினாள்.
(22)
|