பக்கம் எண் :


485

     (இ - ள்.) நல்லோர் வகுத்த முறையாம் அறங்கள் நாலெட்டில்
ஒன்று குறையேம் - நூல்களைக் கற்ற பெரியோர்கள் வகுத்த முறையான
அறங்கள் முப்பத்திரண்டனுள் ஒன்றும் குறையாமல் செய்தோம்,
இல்லோரை அற்பம் இகழோம் - பொருள் இல்லாதவரை அற்பமாக
இகழ்ந்து பேசமாட்டோம். இறுக்கும் இறை அன்றி ஏற உகவேம் -
குடிமக்களிடத்திருந்து வாங்கவேண்டிய ஆறில் ஒரு பங்கு வரி அன்றி
அதிகமாக வாங்க விரும்போம், சொல்லோ மறுத்தும் உரையோம் - நாம்
சொன்ன மொழியை மறுத்து வேறுமொழி கூறி யறியோம், உரைத்த
துறவோர்கள் புத்தி கடவேம் - துறவிகள் கூறிய அறிவுரைகளைத்
தள்ளமாட்டோம், எல்லோர் தமக்கும் இனிதே விளைப்பம் -
எல்லோருக்கும் நன்மைகளையே செய்வோம், ஏதாக வந்தது இதுவே -
அவ்வாறிருக்க நீ பாம்பு கடித்துத் இறக்கும் இத் தீவினை எவ்வாறு
எங்களுக்கு வந்தது? (என்றும் புலம்பினள் சந்திரமதி.)

     'தெய்வமே! நல்வினை செய்தவர்களுக்கு இன்பமும் தீவினை
செய்தவர்களுக்குத் துன்பமும் வருமெனச் சொல்வார் அறிவுடையோர்.
நானும் என் கணவனும் நன்மையே செய்து வாழ்ந்தோம்; அவ்வாறிருந்தும்
எம் புதல்வன் பாம்பு கடித்துத் தனியிடத்தில் இறக்கக் காரணம் என்ன?'
என்றும் கூறியழுதாள்.
                                                    (26)

1003. மறைநீதி யுற்ற புறநா டழித்து
   வருசேனை யாள்வ தறியேம்
மறைநீதி முற்றும் உணரா வமைச்சை
   அணிவாயில் வைத்து மறியேம்
குறையை இழைத்து வினையே விளைத்த
   குடிவைத் திருந்து மறியேம்
இறையே தவத்தின் விளைவே எமக்கும்
   இதுவோ விதித்த விதியே.

       (இ - ள்.) மறை நீதி உற்ற புற நாடு அழித்து வரு சேனை
ஆள்வது அறியேம் - மறைநூல் விதிப்படி நடக்கின்ற மற்றவர் நாட்டை
அழித்து வருகின்ற சேனையை வைத்து நாங்கள் ஆள அறியோம், மறை
நீதி முற்றும் உணரா அமைச்சை அணி வாயில் வைத்தும் அறியோம் -
மறைநூல் நீதிமுறைகளை முழுவதும் அறியாத அமைச்சரை எங்கள்
அரண்மனையில் வைத்துக் கொள்ளமாட்டோம், குறையை இழைத்த
வினையே விளைத்த குடிவைத்திருந்தும் அறியேம் - குற்றங்களைச்செய்து
பாவங்களைத் தேடிய குடிமக்களை எங்கள் நாட்டில் குடியிருக்கும்படி
செய்யமாட்டோம். இறையே தவத்தின் விளைவே - இறைவனே! தவத்தின்
பயனாய் நிற்கும் கடவுளே!, எமக்கும் இதுவோ விதித்த விதியே - எமக்கு
நீ விதித்தவிதி இதுதானோ? (என்றும் புலம்பினள் சந்திரமதி.)

     'தெய்வமே! வேற்றுநாட்டை யழித்துவரும் படையைவைத்தும்,
நீதியறியா அமைச்சரை வைத்தும், தீவினை விளைக்கும் குடிகளை
வைத்தும்