நாங்கள் அரசுபுரிந்திலோம்;
எங்கட்கு இத்தீவினையை நீ விளைத்தது
முறையோ?' என்றும் கதறினாள்.
(27)
1004. |
கனமுந் தருக்கள்
குலமுந் தரித்த
கரமும் பெருத்த வுரமுந்
தினமுஞ் சிறக்கு முகமுந் தரித்த
சிகையுங் கிடக்கு முறைகண்
டினமுந் தரித்த துயிரான பாவி
யிறவாம லென்றன் மகனே
மனமுந் தரிப்ப திலைநொந்து பெற்ற
வயிறுந் தரிப்ப திலையே. |
(இ - ள்.) கனமும் தருக்கள் குலமும்
தரித்த கரமும் -
மேகங்களின் செயலாகிய கைம்மாறு வேண்டாது கொடுக்கும் கொடைத்
தொழிலையும் ஐந்து தருக்களின் செயலாகிய வேண்டுவார் வேண்டிய
பொருள்களைக் கொடுக்கும் கொடைத்தொழிலையும் தாங்கிய உன்
இரண்டு கைகளும், பெருத்த உரமும் - அகன்ற மார்பும், தினமும் சிறக்கும்
முகமும் - ஒவ்வொருநாளும் நாளுக்குநாட் சிறந்து விளங்கும் உன் முகமும்,
தரித்த சிகையும் - தலையில் உள்ள குடுமியும், கிடக்கும் முறை கண்டு -
மண்மேற் கிடக்கின்ற வகையை என் கண்கள் கண்டும், உயிர் ஆன பாவி
இறவாமல் இனமும் தரித்தது - என் உயிரான பாவி இன்னமும்
உடலைவிட்டு நீங்காமல் இருக்கின்றது, என்றன் மகனே - நான் பெற்ற
மைந்தனே!, மனமும் தரிப்பது இல்லை நொந்து பெற்ற வயிறும் தரிப்பது
இலை - என் மனமும் இத்துயரத்தைத் தாங்கமுடியாததாயிருக்கிறது
உன்னை முன்னைநாளில் வருந்திச் சுமந்து பெற்ற வயிறும் இத்துயரத்தைத்
தாங்கமுடியாமலிருக்கிறதே (நான் என்னசெய்வேன் என்று புலம்பினாள்
சந்திரமதி.)
'உயிர் நீங்கிவிட்டால் இத்துன்மில்லையே! என்னுயிர்
இவ்வளவு
கொடிய துன்பத்தையும் பொறுத்திருக்கிறதே! மனமும் கலங்குகிறதே! வயிறு
துடித்து நடுங்குகிறதே! நான் இருக்கலாமோ?' என்பது கருத்து.
(28)
1005. |
பரவாதி கட்கு
மிகவே விளைத்த
படிபோ லுளத்தி லறமே
விரவாத துட்ட முனிகௌசி கற்கு
வினையே மிழைத்த குறைபோற்
கரவே பிடித்து வறியே னளித்த
களிறாவி செற்ற கடுவாய்
அரசே உனக்கு முளதோ பகைக்க
வளியேன் இழைத்த வினையே. |
|