பக்கம் எண் :


487

     (இ - ள்.) பரவாதிகட்கு மிகவே விளைத்த படிபோல் - ஒரு
சமயவாதி மற்றச் சமயவாதிகளுக்குச்செய்த துன்பம்போல, உளத்தில்
அறமே விரவாத துட்டமுனி கௌசிகற்கு வினையேம் இழைத்த
குறைபோல் - மனத்தில் எங்களுக்காகச் சிறிதும் இரக்கம் கொள்ளாத
துட்டமுனிவனாகிய கௌசிகனுக்கு யாங்கள் செய்த குற்றம்போல, வறியேன்
அளித்த களிறு ஆவி - எளியவளான யான் பெற்றெடுத்த இளங் களிறு
போன்ற மைந்தனுடைய உயிரை, கரவே பிடித்து செற்ற கடுவாய் அறவே
- மனத்தில் வஞ்சங்கொண்டு அழித்த விடம் பொருந்திய வாயினையுடைய
பாம்பே!, பகைக்க உனக்கு அளியேன் இழைத்த வினை உளதோ- நீ பகை
கொள்ளும்படி உனக்கு எளிய யான் செய்த தீவினை உண்டோ?
(என்றும் புலம்பினள் சந்திரமதி.)

     சந்திரமதி அறிவிழந்து புலம்பும் நிலையிற் பாம்பையும் விளித்தாள்.
'பாம்பே! நாங்கள் உனக்கு என்ன கொடுமை செய்தோம்? கோசிகனுக்கு
நாங்கள் கொடுமைசெய்ததாகக்கருதி எங்கட்கு அவன் தீங்கு செய்கின்றான்;
நீயும் அவ்வாறு கருதிச் செய்யத் துணிந்தனையோ?' என்றும் கூறியழுதாள்.
                                                    (29)

 
1006. என்னாய கன்றன் மணிமார்பி லேறி
   விளையாடு கின்ற வெழிலோய்
முன்னாய் விளைந்த கனன்மூழ்க வெம்மின்
   முதலே நடந்த மதலாய்
செந்நாய் திரண்டு செறிகா னிருந்து
   தெளியா திரங்கு மெனைநீ
அன்னாய் வருந்த லையெனாத துன்ற
   னறிவிக் கடாது மகனே.

       (இ - ள்.) என் நாயகன்றன் மணி மார்பில் ஏறி விளையாடுகின்ற
எழிலோய் - என் தலைவனுடைய அழகிய மார்பில் ஏறி விளையாடுகின்ற
அழகுடைய மைந்தனே!, முன்னாய் விளைந்த கனல் மூழ்க எம்மின் முதலே
நடந்த மதலாய் - நன்றாக ஓங்கி வளர்ந்த நெருப்பிலே முழ்க எங்களுக்கு
முன்னால் நடந்த மைந்தனே!, செந்நாய் திரண்டு செறி கான் இருந்து
தெளியாது இரங்கும் எனை நீ - செந்நாய்கள் கூட்டமாகக் கூடி
நிறைந்துள்ள இக் காட்டில் இருந்து மனம் தெளியாமல் இரங்குகின்ற
என்னை நீ, அன்னாய் வருந்தலை யெனாதது உன்றன் அறிவுக்கு அடாது
மகனே - அன்னையே வருந்தாதே! என்று கூறாது இருப்பது உன்னுடைய
அறிவுக்குப் பொருந்தாது மகனே! (என்றும் சந்திரமதி புலம்பினாள்.)

     சந்திரமதி தன் மைந்தனறிவை வியந்தாள்! "நெருப்பில் விழ நானும்
உன் தந்தையும் துணிந்தபோது எங்கட்கு முந்தி இறக்கத் துணிந்து
நெருப்பில் வீழச் சென்றனையே! அத்தகைய அறிவுடைய நீ,
இக்கானகத்தில் தனியே கலங்கிப் புலம்பும் என்னை 'அன்னாய்
வருந்தாதே!' என்று ஆறுதல் கூறிலையே !" என்றுங் கூறி யழுதாள்.
                                                    (30)