பக்கம் எண் :


49

மடைப் பள்ளிக்கு ஆயிற்று. காமம் - விருப்பம். மாதவக் காமசாலை -
பெருந்தவத்தை விரும்பிச் செய்யும் இடம். தவச்சாலை என்பதும் அது.
"தோகையர் மாதவக் காமசாலை" என்பதற்கு மங்கையர் பெருந்தவம்
போன்ற காமவின்பத்தையடையும் இடம் என்று பொருள் கொண்டு மகளிர்
தங்கும் அந்தப்புரம் என்றுங் கூறலாம்.
                                                    (14)

 
88. அறம் இருக்கும் மனத்தில் அனைவர்க்கும்
திறம் இருக்கும் புயத்திற் செழுஞ்சுடர்
நிறம் இருக்கும் படையின்க ணீக்கமின்
மறம் இருக்கும் மடைந்தையர் கண்ணினே.

     (இ - ள்.) அனைவர்க்கும் மனத்தில் அறம் இருக்கும் -
அயோத்தியி லுள்ள மக்கள் எல்லோர்க்கும் மனத்தில் அறம் குடியிருக்கும்.
புயத்தில் திறம் இருக்கும் - எல்லோர்க்கும் தோளில் வலிமை தங்கும்,
படையின்கண் செழுஞ்சுடர் நிறம் இருக்கும் - போர்க் கருவிகளில்
பெருகிய சூரியன் போன்ற ஒளி இருக்கும், மடந்தையர் கண்ணின்
நீக்கமில் மறம் இருக்கும் - மகளிர் கண்களில் நீங்காத கவர்ச்சித்திறம்
இருக்கும்.

     ஏகாரம் : ஈற்றசை. மகளிர் கண்களில் இன்பமும் துன்பமும்
ஒருங்கு விளைக்குந் திறனுண்டென்பதை,

     "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
     நோக்கமிம் மூன்றும் உடைத்து"
(1085)

என்னுங் குறட்பாவிற் காண்க. படை என்பது வேல் வாள் முதலிய
ஆயுதங்களை அவை சாணையிற்றீட்டி நெய் பூசப்பட்டுப் பள பளவௌச்
சூரியன்போல ஒளி விடும் என்பது.
                                                    (15)

 
  அயோத்தியில் இரப் பென்பதில்லை
89. தொட்டு மன்னன் சுடர்முடி சூடிய
மட்டு மேக்கமவ் வாணகர்க கில்லையூ
ணட்டுண் பாரன்றி யாதுல ரின்மையால்
இட்டு ணாக்குறை என்பதொ ரேக்கமே.

     (இ - ள்.) மன்னன் தொட்டு சுடர்முடி சூடிய மட்டும் -
அரிச்சந்திரப் பேரரசன் ஆளுகை தொடங்கி ஒளி பொருந்திய
முடிசூடியிருக்கும் அளவும், அவ் வாள் நகர்க்கு - அந்தப் புகழ் ஒளிமிக்க
அயோத்தி நகரில் வாழ்பவர்க்கு. ஏக்கம் இல்லை - ஏக்கம் என்பது
இல்லை, ஊண் அட்டு உண்பார் அன்றி அதுலர் இன்மையால் - உணவு
ஆக்கி உண்பவர்களேயன்றி இரவலர் இல்லாததனால், இட்டு உணாக்குறை
என்பது ஓர் ஏக்கமே - ஐயம் இட்டு உண்ணாத குறையுண்டு என்ற ஏக்கம்
ஒன்றுமே ஆண்டு உளது.

     ஓர் ஏக்கம் - ஓர் ஏக்கம் என்பதன் குறுக்கல் விகாரம், ஒழித்துக்
காட்டணி. உணாக்குறை : தொகுத்தல் விகாரம்; ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். ஏகாரம் : பிரிநிலைப் பொருளில் வந்தது.