பக்கம் எண் :


50

     "இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
     மரப்பாவை சென்றுவந் தற்று."              (குறள். 1018)

மட்டும் - அளவும். இது சூடிய அளவிலிருந்து இதுவரை என்று கொள்க.
"கொடுப்பார்க்கு இரப்பாரில்லாத குறையொன்றுளது கூறுங்கால்" என்பது
ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அன்றியும் "வண்மை யில்லையோர் வறுமை
யின்மையால்" என்பதும் "கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களு மில்லை
மாதோ" என்பதும் நோக்குக.
                                                    (16)

 
  அயோத்தியில் இடும்பை இல்லை
90. கற்றி டும்கொலைக் கண்கண்டு காமுகர்
முற்றி டும்பையும் மோட்டிளங் கொங்கையால்
இற்றி டும்மருங் கென்னும் இடும்பையும்
மற்றி டும்பையம் மண்டலத் தில்லையால்.

     (இ - ள்.) கற்றிடும் கொலைக்கண் கண்டு - கண்டார் உயிர்
உண்ணும் தொழில் பயின்றிடும் பெண்களின் கண்களைக் கண்டு, காமுகர்
முற்று இடும்பையும் - காமுறுகின்றவர்கள் அம் மங்கையர்களையே
வளைகின்ற துன்பமும், மோட்டு இளங் கொங்கையால் - பருத்த
இளமையான கொங்கைகளின் கனத்தாலே, மருங்கு இற்றிடும் என்னும்
இடும்பையும் - இடை ஒடிந்துபோகும் என்னும் துன்பமும்
(அங்கு உள்ளன), மற்று இடும்பை அம் மண்டலத்து இல்லை -
(இவை யன்றி) வேறு எத்துன்பமும் அந் நகரத்தில் இல்லை.

     உம்மைகள் எண்ணும்மைகள். இச் செய்யுளும் ஒழித்துக்காட்டணி.
ஆல் : அசை. காமுகர் முற்று இடும்பையும் இற்றிடும்........ என்னும்
இடும்பையும் ஆங்கு உள்ளன எனப் பயனிலை வருவித்து முடிக்க. மற்று
- பிறிது என்னும் பொருளில் நின்றது. அவ்விரண்டு இடும்பைகளும் அன்றி
வேறு இடும்பைகள் என்று விரித்துப் பொருள் கொள்க. எனவே வறுமை
பசி நோய் முதலிய இடும்பைகள் இல்லை யென்பது கருத்து.
                                                    (17)

 
     அயோத்தியில் பயமின்மை
91. இபம ருப்பெனக் கொங்கை சுமந்திடை
தபமு ரிந்திடும் தக்கதன் றீதெனா
உபய பாதத்திற் கொண்பொற் சிலம்பிடும்
அபயம் அன்றி அபயமற் றில்லையே.

     (இ - ள்.) இப மருப்பு எனக் கொங்கை சுமந்து இடை தப
முரிந்திடும் ஈது தக்கதன்று எனா - யானைக்கொம்பு போன்ற
தனங்களைச் சுமந்து இடை மிகுதியாக முரிந்திடும் இது தக்கதல்ல என்று,
உபயபாதத்திற்கு ஒண் பொற்சிலம்பு இடும் அபயம் அன்றி - இரண்டு
பாதங்களிலும் ஒளிபொருந்திய பொன் சிலம்பு அபயமிட்டு ஒலிப்பதல்லால்,
மற்று அபயம் இல்லை - வேறு அபயக்குரல் அந் நாட்டில் இல்லை.