பக்கம் எண் :


491

     (இ - ள்.) பிணங்கள் சுடும் கடும் புலையர் அரவத்தாலும் -
பிணங்களைச் சுடுகின்ற கடுமையான புலையருடைய ஒலியினாலும்,
பிளந்து தலை வெடித்திடு பேர் அமலையாலும் பிணங்கள் தலைபிளந்து
வெடிக்கின்ற பெரிய ஒலியினாலும், நிணம் கருகிக் சுறுநாறும்
முடையினாலும் - பிணங்களின் கொழுப்புக் கருகி நாறுகின்ற
முடைநாற்றத்தாலும், நெடுங் கனலின் கொழுந்தெழுந்த நிவப்பினாலும் -
நெடிய நெருப்பின் கொழுந்து எழுந்து வளர்ந்த உயரத்தாலும், கணங்கள்
மிகக் களித்தாடும் துழனியாலும் - பூதம் முதலியவற்றின் கூட்டங்கள்
மிகவும் மகிழ்ந்து ஆடுகின்ற ஒலியாலும், கனல் பொறியின் மலிவாலும் -
நெருப்புப்பொறி மிகுந்த காணப்படுவதனாலும், புகையினாலும் - புகை
மிகுதியாக இருத்தலினாலும், சுணங்கு பல பிணங்கு பெருங்
குரைப்பினாலும் - நாய்கள் பல தம்முள் மாறுபட்டுக் குரைக்கின்ற
பெருங் குரைப்பு ஒலியாலும், தொகை அறிந்து உணர்ந்து கொடும் சுடலை
சேர்ந்தாள் - தோகைமயில்போன்ற சந்திரமதி உணர்ந்து கொடுமையான
சுடலையை அடைந்தாள்.

     சந்திரமதி சுடுகாட்டினை முன்னர் அறியாதவளாயினும் பல
அறிகுறிகளால் சுடுகாடு இதுதான் என்று கண்டு சார்ந்தாள் என்பது,
பிணஞ்சுடுவோர் ஆரவாரம், பிணம் வெந்து தலை வெடிக்கின்ற ஒலி,
கொழுப்புக் கருகித் தீய நாற்றம் வருவது, தீக்கொழுந்து உயர்ந்து
தோன்றுவது, பேய்கள் நடமாடும் ஒலி, தீப்பொறி, புகை மேலெழுந்து
செல்லுந் தோற்றம், நாய்கள் பல எலும்புகளைக் கடித்து ஒன்றோடொன்று
குரைத்துப் போராடும் ஒலி. இவை எல்லாம் அவளுக்குச் சுடுகாடு
இதுதான் என்று காட்டின என்க.
                                                    (35)

 
  சந்திரமதி தீ வளர்த்து மைந்தனைச் சுடத் தொடங்குதல்   
1012. கண்டனளீ தீமமெனக் கருத்தில் உன்னிக்
   கடவுளர்தங் காவலிற்றன் மகனை வைத்துப்
பண்டுவெந்து கரிந்தகுறைக் கட்டை எல்லாம்
   பலதிசையும் விரைந்தோடிப் பார்த்தெ டுத்துக்
கொண்டுவந்து பிணங்கள்சுடும் சுடலை நண்ணிக்
   கொள்ளிஎடுத் தோடிஅனல் கூட்டி மூட்டி
மண்டுதழற் கட்டையின்மேன் மகனை வைத்தாள்
   வளர்ந்தெரியும் கனல்விளக்க மன்னன் கண்டான்.

       (இ - ள்.) கண்டனள் ஈது ஈமம் எனக் கருத்தில் உன்னி -
பார்த்தபிறகு இது சுடுகாடு என்று மனத்தில் நினைத்து, கடவுளர்தம்
காவலில் தன் மகனை வைத்து - தேவர்களுடைய காவலில் தன்னுடைய
மகனை வைத்துவிட்டு, பண்டு வெந்து கரிந்த குறைக் கட்டை எல்லாம்
பல திசையும் விரைந்தோடிப் பார்த்து எடுத்துக்கொண்டு வந்து - முன்பு
வெந்து கரிந்துபோன குறைக்கட்டைகளையெல்லாம் பல திசைகளிலும்
விரைந்து ஓடிப்பார்த்து எடுத்துக்கொண்டுவந்து, பிணங்கள் சுடும் சுடலை
நண்ணி - பிணங்களைச் சுடுகின்ற சுடுகாட்டை அடைந்து, கொள்ளி
எடுத்து ஓடி அனல் கூட்டி மூட்டி - கொள்ளி நெருப்பை எடுத்து ஓடி
நெருப்பு மூட்டி, மண்டு தழற் கட்டையின் மேல் மகனை வைத்தாள் -
எரியும் நெருப்பின்மேல் தன் மகன் உடலை வைத்தாள், வளர்ந்து எரியும்
கனல் விளக்கம் மன்னன் கண்டான் - வளர்ந்து எரிகின்ற நெருப்பின்
ஒளியை மன்னன் பார்த்தான்.