|
சொல்லின் பொருளும்
(பயனும்), இத்தலம் புக்கபின் பொய்த்ததோ -
இந்தத் தலத்தில் யாங்கள் வந்தபின் பொய்யாகி விட்டதுவோ?
சந்திரமதியின்
மங்கலநாண் அரிச்சந்திரன் கண்ணுக்கு அன்றிப் பிற
ஆடவர் கண்ணுக்குப் புலப்படாது என இறைவன் சந்திரமதியின்
தந்தைக்கு வரம் கொடுத்திருந்தார். அதனை இங்குச் சந்திரமதி
குறிப்பிடுகின்றாள். திருமங்கலியம் பிற ஆடவர் கண்ணுக்குப் புலப்படாமல்
இருப்பதே சிறப்பு.
(45)
| 1022. |
பனிம திச்சடைப்
பாவைபங் காளனார்
இனிய வாசக மின்றொடும் தீர்ந்ததாற்
புனித னாரினும் பூவளந் தோனினும்
முனிவ னோமுதி யோனென வேங்கினாள். |
(இ - ள்.) பனி மதிச் சடை -
குளிர்ந்த திங்களை அணிந்த
சடையினை உடையவரும், பாவை பங்காளனார் - உமாதேவியை இடப்
பாகத்தில் உடையவரும் ஆகிய சிவபெருமான் கூறிய, இனிய வாசகம்
இன்றொடும் தீர்ந்ததால் - இனிய மொழி இன்றோடும் தீர்ந்துபோய்
விட்டது, புனிதனாரினும் பூ அளந்தோனினும் - தூய்மையுடைய
சிவபெருமானைப் பார்க்கினும் இப்பூமியை அளந்த திருமாலைப்
பார்க்கினும், முனிவனோ முதியோன் என ஏங்கினாள் - விசுவாமித்திர
முனிவனோ சிறந்தவன் எனக் கூறி வருந்தினாள்.
கோசிகமுனிவன் வந்து நாடுநகரங்களை வஞ்சகமாக
வாங்கியதும்
பல தீமைகள் புரிவதும் அறிந்து, அம் முனிவனே இதனையும் செய்த
வன்போலும் என்று சிந்தித்துப் புலம்பினாள் என்று கொள்க. புலையன்
காணும்படி செய்தது முனிவன் செயல் என்பது சந்திரமதியின் கருத்து.
(46)
| 1023. |
அற்புக் காழிய
னானரிச் சந்திரன்
விற்பப் போயின மேன்மைக் குலத்தொடும்
பொற்புப் போம்பொறை போம்நிறை போமென்றன்
கற்புப் போவதென் னென்று கலங்கினாள். |
(இ
- ள்.) அற்புக்கு ஆழி அனான் அரிச்சந்திரன் - அன்புக்குக்
கடல்போன்ற அரிச்சந்திரன், விற்பப் போயின மேன்மைக் குலத்தொடும்
- விற்றபோது விலகிச்சென்ற மேலான குலப் பண்போடு, பொற்பு போம்
பொறை போம் நிறை போம் - அழகு போகும் பொறுமை போகும்
நெஞ்சினை ஒருவழி நிறுத்தும் தவநிலை போகும், என்றன் கற்புப்போவது
என் என்று கலங்கினாள் - என்னுடைய கற்புப்போவதற்குக் காரணம்
என்ன என்று மனம் கலங்கினாள்.
அற்பு
- அன்பு. 'பிறருக்கு அடிமையாகும்போது உயர்குலப்
பெருமை, அழகு, பொறுமை, மனத்தை ஒருவழி நிறுத்தும் நிறைவு
முதலியன போய்விடினும் என் கற்புப் போகுமோ? எவ்வாறு போய்
விடும்? கற்புப்போவதற்குக் காரணம் யாது?' என்று மனங் கலங்கினள்.
மங்கலநாணைப் புலையன் கண்டால் கற்புப் போய்விட்டது தான் என்பது
அவள் கருத்து.
(47)
|