பக்கம் எண் :


499

  தன் மனைவி என அறிந்து மயங்கித் தெளிதல்   
1024. அனைய காலை அரிச்சந் திரனுந்தன்
மனைவி யாமிவ ளென்று மனம்கொளாத்
தனையன் மாண்டது தன்னைஉட் கொண்டுள
நினைவை நீக்கி மறப்பையு நீக்கினான்.

     (இ - ள்.) அனைய காலை அரிச்சந்திரனும் தன் மனைவியாம்
இவள் என்று மனம் கொளா - அப்பொழுது அரிச்சந்திரனும் இவள் தன்
மனைவியே என்பதை மனத்திற்கொண்டு, தனையன் மாண்டது தன்னை
உட்கொண்டு - தன் மகன் இறந்ததை அறிந்து, உளம் நினைவை நீக்கி
மறப்பையும் நீக்கினான் - மனத்தில் தன் நினைவை நீக்கி மறந்து, பின்
தன் உணர்வு வரப் பெற்றான்.

     கொளா : (கொண்டு) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
சந்திரமதி புலம்பும்போது அவள் கூறிய சொற்களின் குறிப்பால்
அரிச்சந்திரன் தன் மனைவியென அறிந்தான் என்பது. மகன் இறந்தான்
என்று மனம் வருந்தினான்; நினைவை மறந்தான் : மறதியையும்
நீக்கினான்; தெளிந்தான் என்க.
                                                    (48)

 
  அரிச்சந்திரன் தன் மைந்தன் என அறிதல்   
1025. கள்ள வேகத் தரவு கடிக்கநம்
வள்ள லோஇறந் தானென்று மன்னவன்
உள்ளு ளேநொந் துயிர்த்துயிர்த் துப்புறம்
விள்ள லானுரை விம்மி மயங்கினான்.

       (இ - ள்.) கள்ள வேகத்து அரவு கடிக்க - கள்ளத்தனமாக
ஒளிந்திருந்து ஓடி வரும் வேகத்தையுடைய பாம்பு கடிக்க, நம் வள்ளலோ
இறந்தான் என்று - நம் வள்ளலாகிய மைந்தனோ இறந்து விட்டான் என்று,
மன்னவன் உள் உளேநொந்து உயிர்த்து உயிர்த்து - மன்னன் தன்
மனத்துக்குள்ளேயே நொந்து வருந்திப் பெருமூச்சுப் பலமுறைவிட்டு, புறம்
விள்ளலான் உரை - வெளியில் ஒரு வார்த்தையும் பேசாதவனாய், விம்மி
மயங்கினான் - விம்முதல் அடைந்து மயங்கினான்.

     பாம்பு கள்ளத்தனமாக ஒளிதலும், விரைவாக ஓடும் தன்மையும்
உடையது. ஆதலால் 'கள்ளவேகத்தரவு' என்றார். உயிர்த்து உயிர்த்து;
அடுக்குத்தொடர். விள்ளலான் : முற்றெச்சம். நம் மைந்தனோ
இறந்தானென்று உள்ளே எண்ணிப் பெருமூச்சுவிட்டு ஒன்றும் பேசாமல்
மயங்கினன் மன்னன்.
                                                    (49)

 
      அரிச்சந்திரன் புலம்புதல்
1026. அன்னை யின்றி அருங்கானி லெய்திய
உன்னை யோடி அரவங் கடித்தலின்
மின்னை யும்முனை யும்விற்ற வெவ்வினை
என்னை யெவ்வண நொந்தனை யேந்தலே.