பக்கம் எண் :


501

1029. விற்ற நாளில்என் மேனி தழீஇயநிற்
பற்றி யந்தண னீர்த்ததும் பார்த்திருந்
திற்றை நாண்மட் டிரங்காத வென்வயின்
உற்ற பாவ மொழித்தனை யோஎன்றான்.

     (இ - ள்.) விற்ற நாளில் என் மேனி தழீஇய - நான் உன்னையும்
உன் தாயையும் விற்ற நாளில் என் உடம்பைத் தழுவிக்கொண்ட, நின்
பற்றி அந்தணன் ஈர்த்ததும் பார்த்து இருந்து - உன்னைப் பற்றி
இழுத்துக்கொண்டு அந்தணன் சென்றதைப் பார்த்திருந்தும், இற்றை நாள்
மட்டு இரங்காத - இன்று நாள் வரையில் இரங்கிச் செய்ய வேண்டுவன
செய்யாத, என்வயின் உற்ற பாவம் ஒழித்தனையோ என்றான் -
என்னிடத்தில் வைத்த மனவருத்தத்தை நீக்கினையோ நீ என்றான்.

     'மறையோனுக்கு நான் உன்னை விற்ற நாளில் என்னைத் தழுவி
நின்றாய் நீ! அவ்வாறு தழுவிய கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டு
சென்றான் அம் மறையோன்! அக் கொடுமையைப் பார்த்தும் உன்னைப்
பிரிந்து வந்தேன்! இந்நாள் வரையும் உன்னை மீட்பதற்குரிய வழி
காணாமலும் உன்னைக் குறித்து இரங்காமலும் இருந்தேன்! ஆதலால்
என்னைக் காண்பது பாவமென்று உன்னுயிரை மாய்த்தனையோ?' என்றும்
புலம்பினன் அரிச்சந்திரன்.
                                                    (53)

 
  அரிச்சந்திரன் மைந்தனிறந்ததுகுறித்துப் புலம்புதல்   
1030. விலைப்பட் டாய்பட்டும் வெவ்வர வாய்ப்பட்டுத்
தொலைப்பட் டாயன்னை தோளிற் கொணர்ந்திடத்
தலைப்பட் டாய்தமி யேனெறி யத்தகர்ந்
தலைப்பட் டாயிது வோவிதி யையனே.

       (இ - ள்.) விலைப்பட்டாய் - நீ விலைக்கு விற்கப்பட்டாய்,
பட்டும் வெவ்வர வாய்ப்பட்டு - அவ்வாறு விற்கப்பட்டும் கொடிய
பாம்பின் வாயில் கடிபட்டு, தொலைபட்டாய் - இறந்தாய், அன்னை
தோளிற் கொணர்ந்திடத் தலைப்பட்டாய் - தாய் தன் தோளிற்
கொண்டுவர என் கண் முன் இருந்தாய், தமியேன் எறியத் தகர்ந்து
அலைப்பட்டாய் - பாவியாகிய யான் வீசி எறிந்தபோது இடம் பெயர்ந்து
அலைக்கப்பட்டாய், ஐயனே இதுவோ விதி - ஐயனே! இதுதானா உன்
தலையில் எழுதப்பட்ட விதி (என்றும் புலம்பினான் அரிச்சந்திரன்.)

     வெம்மை + அர = வெவ்வர. 'அரவு' என்பது 'அர' என நின்றது.
அரா, அர, அரவு எனவும் வரும். "குறியதன் கீழாக் குறுகலும்" (நன். 172).
'இதுவோ உனக்கு விதித்தவிதி இதுவோ' எனவும், உன் துன்பங்களைக்
காண 'எனக்கு விதித்தவிவதி இதுவோ' எனவும் பொருள் கொள்க.
                                                    (54)

 
1031. காத லாலுனைக் காணாத தாயையும்
ஈதெ லாம்விளைத் தெற்றிய என்னையும்
மீதெ லாம்அர வின்விடம் மேயநாள்
ஏதெ லாம்உரைத் தாயுரை யேந்தலே.