|
(இ
- ள்.) காதலால் உனைக் காணாத தாயையும் - அன்போடு
வந்து உன்னைக் காணாத தாயையும், ஈது எலாம் விளைத்து எற்றிய
என்னையும் - இந்தத் துன்பங்களையெல்லாம் உனக்கு உண்டாக்கி
இப்பொழுது காலால் எடுத்து எறிந்த என்னையும், மீது எலாம் அரவின்
விடம் மேய நாள் - உன் உடம்பு முழுவதும் பாம்பின் விடமேறும்
அப்போதில், ஏந்தலே ஏது எலாம் உரைத்தாய் உரை - ஆண்மையிற்
சிறந்த என் மைந்தனே! நீ எவ்வெவ்வாறு கூறி வருந்தினையோ?
அதனைச் சொல்க (என்றும் புலம்பினான் அரிச்சந்திரன்.)
பாம்பின்
விடம் குருதியுடன் சேர்ந்து உடல் முழுவதும்
பரவுமாதலின் 'மீதெலாம் அரவின் விடம் மேய நாள்' என்றான். துன்பம்
வந்தபோது சுற்றத்தாரை நினைப்பது இயல்பாகலின் 'ஏதெலா முரைத்தாய்'
என்றான்.
(55)
| 1032. |
பிறப்பு ணர்ந்தவன்
றேபிறி தின்றியுன்
இறப்பு ணர்ந்தனம் என்னினும் எம்முனோர்
சிறப்பும் செல்வமும் சேர்தலின் தீர்ந்தவா(று)
அறப்பெ ரும்பிழை யென்றென் றழுங்கினான். |
(இ - ள்.) பிறப்பு உணர்ந்த அன்றே
பிறிது இன்றி - நீ
பிறந்தாய் என்பது அறிந்த உடனே வேறுபாடு இல்லாமல், உன் இறப்பு
உணர்ந்தனம் என்னினும் - உன்னுடைய இறப்பை அறிந்தோம் என்றாலும்,
எம் முன்னோர் சிறப்பும் செல்வமும் சேர்தலின் தீர்ந்தவாறு - எம்
முன்னோர் தேடிவைத்த சிறப்பையும் செல்வத்தையும் அடையாமல் நீ
இறந்தவிதம், அறப் பெரும் பிழை என்று என்று அழுங்கினான் - மிகப்
பெரிய பிழையாகும் என்று வருந்தினான்.
'பிறந்தவர் இறத்தல் உறுதி' என்பதை நாம் அறிந்திருப்பினும்
சிறப்பும் செல்வமும் அடையாது இறந்ததுகுறித்தே நாம் வருந்துகின்றோம்
என்பது கருத்து. "பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும்
விழித்தலும் போன்ற துண்மையின்" (மணிமே. 16, 81) என்ற அடிகளின்
கருத்து ஒப்புமை காண்க.
(56)
| 1033. |
வாளின் மிக்க
வயமன்னர் வந்துநின்
தாளில் வீழ்ந்தழ லின்றிநின் றாய்திருத்
தோளி லேற்றிச் சுடலையி லேவர
வேளின் மிக்கவ வெவ்வினை யோவென்றான். |
(இ
- ள்.) வாளின் மிக்க வயமன்னர் வந்து - வாட்போரில்
வல்ல வெற்றி மன்னர் வந்து, நின் தாளில் வீழ்ந்து அழல் இன்றி - நின்
தாள்களில் வீழ்ந்து அழும் வண்ணம் நீ இறவாமல், நின் தாய்
திருத்தோளில் ஏற்றிச் சுடலையிலே வர - உன் தாய் அழகிய தோளிலே
ஏற்றிக்கொண்டு சுடுகாட்டிற்கு வரும் நிலையில் இறந்தது, வேளின் மிக்கவ
வெவ்வினையோ என்றான் - மன்மதனைவிட அழகிற் சிறந்தவனே!
கொடிய பாவவினையால் வந்ததோ என்றான் (அரிச்சந்திரன்.)
|