பக்கம் எண் :


506

     'யானை உண்ட விளங்கனி' என்பது, 'தேரை குடித்த தேங்காய்'
என்பதுபோல வரும் பழமொழி. விளங்காய்க்கு வரும் நோயை இவ்வாறு
கூறுவது. விளங்கனி சிலவற்றை உடைத்தால் உள்ளே ஒன்றும் இன்றி
வெறிதாக இருக்கும். அதனை 'யானை யுண்ட விளங்கனி என்பது வழக்கு.
அதுபோல உள்ளீடின்றி வெறுங்கூடாக இருந்தான் என்பது கருத்து.
                                                    (64)

 
1041. மன்னவன் வருந்தியுற மாமயிலை அன்னாள்
துன்னவரி தாயசுடு காடது கடந்தே
என்னவினை இன்னம்வரும் என்பது கருத்தாய்
மின்னுமணி நீள்புரிசை வீதியிடை புக்காள்.

       (இ - ள்.) மன்னவன் வருந்தியுற - மன்னன் இவ்வாறு வருந்திக்
கொண்டிருந்தபோது, மா மயிலை அன்னாள் - சிறந்த மயில் போன்ற
சந்திரமதி, துன்ன அரிதாய சுடுகாடு அது கடந்தே - நெருங்குதற்கு அரிய
சுடுகாட்டைக் கடந்து சென்று, என்ன வினை இன்னம் வரும் என்பது
கருத்தாய் - இன்னும் என்ன துன்பங்கள் வருமோ என்பதை
நினைத்துக்கொண்டவளாய், மின்னும் மணி நீள் புரிசை வீதியிடை
புக்காள் - ஒளிவீசும் மணிகள் பதித்த நீண்ட மதில்களையுடைய
பெருந்தெருவிற் சென்றாள்.

     துன்பம் வந்தபோது இருக்கும் கவலையைவிட வரப்போகும்
துன்பத்தை நினைத்தாலே கவலை அதிகமாகும். என்ன துன்பம் வருமோ,
எப்படி வருமோ என்று நினைக்கும்போது கவலை மிக அதிகப்படும்.
வினை - இங்கு வினைப்பயனாகிய துன்பத்தை உணர்த்தியது. 'பட்ட
காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்' என்பதை நினைத்தாள்
சந்திரமதி என்று கொள்க.
                                                    (65)

 
1042. கிள்ளைமொழி அம்மறுகு கிட்டுவதன் முன்னே
வள்ளையொலி மாடநிறை காசிநகர் மன்னன்
பிள்ளையை எடுத்தயல் பெயர்ந்துயிர்செ குத்தே
கள்ளர்சிலர் நல்லணி கவர்ந்துகொடு போனார்.

     (இ - ள்.) கிள்ளை மொழி அம் மறுகு கிட்டுவதன் முன்னே -
கிளிபோன்ற மொழி பேசும் சந்திரமதி அந்த வீதியிற் செல்வதற்கு
முன்னே. வள்ளை ஒலி மாடம் நிரை காசி நகர் மன்னன் - உலக்கைப்
பாட்டின் ஒலியுள்ள மாளிகை வரிசைகளையுடைய காசிப்பதி யரசனுடைய,
பிள்ளையை எடுத்து அயல் பெயர்ந்து உயிர் செகுத்தே - பிள்ளையை
எடுத்துக்கொண்டு அப்பால் பெயர்ந்து உயிரைக் கொன்று, கள்ளர் சிலர்
நல்லணி கவர்ந்து கொடு போனார் - கள்வர் சிலர் குழந்தையின் நல்ல
அணிகளைக் களவுசெய்துகொண்டு சென்றார்கள்.

     சந்திரமதி செல்லுந் தெருவில் கள்ளர்கள் சிலர் அந்நகர் மன்னன்
மைந்தனை எடுத்துக்கொண்டு வந்து கொன்று அவன் பூண்டிருந்த
ஆபரணங்களைக் கைப்பற்றிக்கொண்டு போய்விட்டனர். அவனுடல்
கிடந்தது அத் தெருவில் என்க.
                                                    (66)