பக்கம் எண் :


509

நோதகவினாலும் - இவ்வாறு துன்பப்படுவதைக் காட்டிலும் நம் பிள்ளை
இறந்த துன்பத்தை அடைதலைக் காட்டிலும், சாவது இனிது என்பது
மனத்திடை தரித்தாள் - இறப்பதே மேல் என்று மனத்தில் நினைத்தாள்.

     'தெய்வவருள் நமக்கில்லை என்பது நமக்குப் பல துன்பங்கள்
வருவதனால் தெரிகிறது. பல துன்பங்களை யடைந்து மகனிறந்த பின்பும்
வாழ்வதிற் பயனென்ன? சாவது நல்லதுதான்' என்று துணிந்தாள் சந்திரமதி.
                                                    (71)

 
1048. மெய்யுரைசெ யிற்பொயென மேவியது வீணாம்
ஐயம்இதின் இல்லைஅத னாற்புரையி லாத
பொய்யுரையும் மெய்யொடு பொருந்துமென நாடித்
தையலவ ரோடிது தனைப்பகர லுற்றாள்.

       (இ - ள்.) மெய் உரை செயின் பொய் என மேவி அது
வீணாம் - நாம் உண்மையை உரைத்தால் அது பொய் என்று பொருந்தி
நாம் உரைத்தது வீணாகிவிடும், ஐயம் இதின் இல்லை - இதில் ஐயப்பாடு
ஒன்றும் இல்லை, அதனால் புரை இலாத பொய் உரையும் மெய்யொடு
பொருந்தும் என நாடி - அதனால் குற்றம் இல்லாத பொய்ம்மொழியும்
உண்மை யென ஒப்புக்கொள்ளப்படும் என விரும்பி, தையல் அவரோடு
இதுதனைப் பகரலுற்றாள் - அப் பெண் காவலர்களிடம் இதனைப் பேசல்
உற்றாள்.

     "பொய்மையும் வாய்மை யிடத்த" என்னும் திருக்குறள் இங்கு ஒப்பு
நோக்கத்தக்கது. 'இப்போது நாம் பொய் பேசுவது மெய் போலக்
கருதப்படும். அதனால் யார்க்குந் தீங்கில்லை என்று துணிந்தாள்.
                                                    (72)

 
      சந்திரமதி காவலர்க்குக் கூறுதல்   
1049. ஒன்றினிது கேண்மினுல கத்தினில் இரக்கத்(து)
அன்றியுயிர் கொன்றுழல் அரக்கியறி யீரோ
இன்றுயி ரிழந்தமக வென்கையி லிருக்கக்
கொன்றதிலை யென்னவல னோகொடியள் என்றாள்.

     (இ - ள்.) ஒன்று இனிது கேண்மின் - நான் சொல்வது ஒன்றை
இனிதாகக் கேளுங்கள். உலகத்தினில் இரக்கத்து அன்றி உயிர் கொன்று
உழல் அரக்கி அறியீரோ - இவ்வுலகத்தில் இரக்கமுடன் வாழ்வதல்லாமல்
உயிர்களைக் கொன்று திரிந்து வாழ்கின்ற அரக்கியை நீங்கள்
அறியமாட்டீர்களோ, இன்று உயிர் இழந்த மகவு என் கையில் இருக்க -
இன்று இறந்த பிள்ளை என் கையில் இருக்கும்போது, கொன்றது இல்லை
என்ன வலனோ கொடியள் என்றாள் - கொடியவளாகிய யான்
கொல்லவில்லை என்று சொல்ல வல்லமையுடையவளோ? (என்றாள்
சந்திரமதி.)