பக்கம் எண் :


510

     'அரக்கியை நீங்கள் நேரிற் கண்டதில்லை யென்றாலும் கேள்வியால்
அறிந்திருப்பீர்கள்; அவள்தான் நான்! பிள்ளையைக் கொன்று தின்று
வாழ்வதே என் தொழில்! கையிற் பிள்ளை இருக்கும்போது நான்
கொன்றிலன் என்று கூறுவேனோ!' என்று பொய் கூறினள்.
                                                    (73)

 
  சந்திரமதியைக் காவலர் கட்டியிழுத்துக்கொண்டு
         தெருவிற் செல்லுதல்
  
1050. ஆயின்விடன் மின்னென அடித்தணி கயிற்றால்
சாயும்இரு கைத்துணை பிணித்தவி சவத்தை
வேயும்விழை தோளின்மிசை யேற்றிவிறல் மன்னன்
வாயில்தனை நாடிமயி லைக்கொடு நடந்தார்.

       (இ - ள்.) ஆயின் விடன்மின் என - ஆனால் விடாதீர்கள்
என்று, அடித்து அணி கயிற்றால் சாயும் இரு கைத்துணை பிணித்து -
அடித்து அழகிய கயிற்றினால் மெலிந்துகிடக்கும் அவளுடைய இரண்டு
கைகளையும் கட்டி, அவி சவத்தை - இறந்த பிணத்தை, வேயும்
விழைதோளின் மிசை ஏற்றி - மூங்கிலினும் சிறந்த தோளின்மேல் ஏற்றி,
விறல் மன்னன் வாயில்தனை நாடி மயிலைக் கொடு நடந்தார் - வெற்றி
பொருந்திய காசிநகரத்து மன்னனுடைய அரண்மனை வாயிலை நோக்கி
மயில் போன்ற சந்திரமதியைக் கொண்டு சென்றார்கள்.

     விடன்மின் - (விடாதீர் : விடு + அல் + மின் = அல் : எதிர்மறை
இடைநிலை. முன்னிலை ஏவற்பன்மை வினைமுற்று. அணி கயிறு என்பது
இங்கு உறுதியான கயிறு என்னும் பொருளது. சாயும் இரு கை -
செயலற்றுக் களைத்த இரு கை. வேயும் விழை தோள் - மூங்கிலும் கண்டு
அழகை விரும்பும் தோள்.
                                                    (74)

 
1051. கைகொடு சவத்தினிரு கால்களை யணைத்து
மெய்கொடு சுமந்தடி விதிர்ப்புற மிதித்துப்
பெய்கொடு நிணங்குருதி பின்னுமுனு மொய்க்க
மொய்குழல் வணங்கிடை முறிந்திட நடந்தாள்.

     (இ - ள்.) கை கொடு சவத்தின் இரு கால்களை அணைத்து -
சந்திரமதி தன் கைகளைக்கொண்டு பிணத்தின் இரண்டு கால்களையும்
அணைத்துக்கொண்டு, மெய் கொடு சுமந்து - உடம்பொடு சேர்த்துச்
சுமந்துகொண்டு, அடி விதிர்ப்புற மிதித்து - கால்கள் நடுங்கும்படி மிதித்து,
பெய் கொடு நிணம் குருதி பின்னும் முன்னும் மொய்க்க - சிந்துகின்ற
நிணமும் இரத்தமும் பின்னாலும் முன்னாலும் வழிய, வணங்கு இடை
முறிந்திட - வளைகின்ற இடை முறியும்படி, மொய் குழல் நடந்தாள் -
நெருங்கிய கூந்தலையுடைய பெண் நடந்து சென்றாள்.

     அப்போதுதான் கொன்று கள்ளர்கள் போட்ட சவம் ஆதலாற்
குருதியும் நிணமும் ஒழுகின பின்னும் முன்னும் எனக் கொள்க.
                                                    (75)