பக்கம் எண் :


511

1052. குறித்ததி சினத்தொடு கொதித்தவ ரடிக்கத்
தெறித்தகுரு தித்துளி திசைத்திசையின் மொய்க்கப்
பிறித்திரு கயிற்றிடை பிடித்துவர நாய்மேல்
வெறித்தடர மானென வெருண்டுமுன் நடந்தாள்.

     (இ - ள்.) குறித்து அதி சினத்தொடு கொதித்து அவர் அடிக்க -
அவள் செயலை நினைத்து மிகுந்த கோபத்தோடு காவலர்கள் அடிக்க,
தெறித்த குருதித் துளி திசைத் திசையின் மொய்க்க - தெறிக்கின்ற
இரத்தத்துளிகள் திசைதோறும் சிந்த, பிறித்து இரு கயிற்றிடை பிடித்து வர
- இருபக்கமும் கயிற்றில் கட்டிப் பிடித்துவர, நாய் மேல் வெறித்து அடர
- பல நாய்கள் தன்மேல் பாய்ந்து வெறி கொண்டு கடித்துத் துன்புறுத்த
மான் என வெருண்டு முன் நடந்தாள் - அஞ்சியோடும் ஒரு
மானைப்போல வெருண்டு முன்னே நடந்து சென்றாள் (சந்திரமதி.)

     காவலர்களைப் பல நாய்களாகவும், அவர்கள் அடித்து நெருங்கித்
துன்புறுத்துவது அந் நாய்கள் கூடிக் கடித்து இழுத்துத் துன்பப்
படுத்துவதாகவும், சந்திரமதியை ஒரு மான் வெருண்டு போவதாகவும்
கொள்க. இஃது உவமையணி.
                                                    (76)

 
     அரண்மனை வாயிலை யடைதல்  
1053. வேலைநகர் காவலரும் வேதமுனி வற்கன்(று)
ஆலைவயல் சூழ்பதி யளித்தமட மாதும்
காலைமுர சங்குளிறு வாயில்கள் கடந்தே
மாலைமுடி மன்னனுறை மண்டப மணைந்தார்.

       (இ - ள்.) வேலை நகர் காவலரும் - கடல்போற் பரந்த
நகரத்தைக் காக்கின்ற வீரர்களும், வேத முனிவற்கு அன்று ஆலை வயல்
சூழ் பதி அளித்த மடமாதும் - வேதங்கற்ற விசுவாமித்திர முனிவனுக்கு
அன்று கரும்பு வயல்களால் சூழப்பெற்ற நகரத்தைக் கொடுத்த
சந்திரமதியும், காலை முரசங் குளிறும் வாயில்கள் கடந்தே காலையில்
முரசு ஒலிக்கும் கோட்டை வாயில்களைக் கடந்து, மாலை முடி மன்னன்
உறை மண்டபம் அணைந்தார் - மாலை அணிந்த முடியினை உடைய
மன்னன் இருக்கும் மண்டபத்தை அடைந்தார்கள்.

     கோட்டை வாயில்களில் காலை முரசு ஒலிப்பது வழக்கம். ஆலை
- கரும்பு. கௌசிகனுக்கு நாடு நகரங்களை யளித்தவன் அரிச்சந்திரன்
ஆயினும், வாய்மை தவறாது வழங்கும்படி கூறியவள் சந்திரமதி யாதலால்
'வேதமுனிவற்கு.........பதியளித்த மடமாது' என்றார்.
                                                    (77)

 
1054. அத்தல மணைந்தவருள் அக்கொடியர் மன்னைக்
கைத்தலம் எடுத்திரு கழற்றொழுது நின்றார்
மெய்த்தவம் முயன்றமணி வேயனைய தோள்மேல்
வைத்தபிண முங்கொடு மடக்கொடியு நின்றாள்.