பக்கம் எண் :


514

1059. என்றுநர வன்றசைகள் உண்டுடல்எ டுத்தேன்
வென்றிவடி வேலிறைவ நின்னகரின் மேவி
இன்றிரவின் நின்மக விளந்தசைவி ரும்பித்
தின்றிட நினைத்துயிர் செகுத்ததுள தென்றாள்.

     (இ - ள்.) வென்றி வடிவேல் இறைவ - வெற்றியைத் தரும் கூரிய
வேலைப் பிடித்த மன்னனே!, என்றும் நர வன்தசைகள் உண்டு உடல்
எடுத்தேன் - எப்பொழுதும் மனிதருடைய வலிய தசைகளைத் தின்றே என்
உடம்பை வளர்த்தேன், இன்று இரவின் நின் நகரின் மேவி - இன்று
இரவு உன்னுடைய நகரத்தை அடைந்து, நின் மகவு இளந் தசை விரும்பி
- உன்னுடைய குழந்தையின் இளந்தசையை விரும்பி, தின்றிட நினைத்து
உயிர் செகுத்தது உளது என்றாள் - தின்ன நினைத்து உயிர் கொன்றது
உண்டு என்று சந்திரமதி கூறினாள்.

     நரம் - மனிதர். வன்மை + தசை - வன்றசை. இளமை + தசை -
இளந்தசை. 'மனிதர் தசையுண்டு என்னுடல் வளர்த்தேன்; இன்றும் நின்
மகனைக் கொன்று தின்றேன்; உண்மைதான்!' என்று கூறினள்.
                                                    (83)

 
        மன்னன் சிந்தனையும் மயக்கமும்   
1060. மடக்கொடி உரைக்கஇது மன்னவன்உ ரைப்பான்
அடக்கமும் ஒழுக்கமும் அரக்கியலள் என்னும்
இடர்ப்பல இவட்கிவர் இழைத்தமை நமக்குச்
சுடச்சுட உரைக்குமிவள் சொன்னமொழி என்றான்.

       (இ - ள்.) மடக் கொடி இது உரைக்க மன்னவன் உரைப்பான்
- இளங்கொடிபோன்ற சந்திரமதி இதனைச் சொன்னவுடன் மன்னன்
உரைக்கத் தொடங்கினான், அடக்கமும் ஒடுக்கமும் அரக்கி அலள்
என்னும் - இவளுடைய மன அடக்கமும் கை கால் முதலிய
உறுப்புக்களின் ஒடுக்கமும் இவள் அரக்கி அல்லள் என்பதைக்
கூறுகின்றன, இடர் பல இவட்கு இவர் இழைத்தமை - இவளுக்கு இவர்கள்
துன்பங்கள் பலவற்றைச் செய்ததை, நமக்குச் சுடச்சுட உரைக்கும் இவள்
சொன்ன மொழி என்றான் - நமக்கு நன்கு சுடும்படி இவள் கூறும்
மொழிதான் இது என்றான்.

     சுடச்சுட : அடுக்குத்தொடர். சொன்ன மொழி - குறிப்பினால் வேறு
பொருள் தரும் மொழி. 'அடக்கமும் ஒடுக்கமும் இவள் இன்னுரையும்
அரக்கியல்லள் என்பதைக் குறிப்பாற் காட்டுகின்றன. துன்பங்கள் பல
காவலர்கள் புரிந்தனர்போலும்! அதனாற் கொதித்துக் கூறும் வார்த்தை
இது' என்று கூறினான் அருகிலிருந்த அமைச்சர்கட்கு.
                                                    (84)

 
1061. உயிர்க்கொலை புரிந்தவர் முகக்குறிஉ ரைக்கும்
கையிற்குறி உரைக்கும்இரு கட்குறிஉ ரைக்கும்
குயிற்குரல் மடந்தையிவள் கொன்றகுறி உண்டென்(று)
அயிர்ப்பிலை எனக்கென அமைச்சரொ டுரைத்தான்.