பக்கம் எண் :


516

விட்டுவிட்டால், மன் உரை கடல் புவி வளாகம் மிசை வாழும் இன்னுயிர்
இறக்கும் என்றார் - நிலைபெற்ற புகழ்வாய்ந்த கடலால் சூழப்பெற்ற இந்
நிலவுலகத்தில் வாழும் இனிய உயிர்கள் இறக்கும் என்றார்.

     "கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல்" முறையாதலின், இவள்
உயிர் தப்பினால் மாநிலமக்கள் பலரை இவள் கொல்வாள் என்ற கருத்துக்
கூறப்பட்டது. காவலர் இங்ஙனம் கூறியது, அவர் கண்டு பிடித்தனர் என்ற
பெருமையை யடைவது குறித்தே. இவளை விட்டாற் கொலை செய்தவரைக்
கண்டுபிடித்தல் இனி அரியதாகும் என்பதும் அவர் உட்கோளாகும்.
                                                    (87)

 
  அடிச்சுவடு பார்த்துவரச் சிலரை யனுப்புதல்   
1064. அன்னவை உரைத்தவரை மன்னவன் அமைத்தே
என்னைபல பேசுவதுஇவ் வேழையடி தானோ
பின்னையடி சென்றதுள தோபிறிது எனக்கண்(டு)
இந்நொடியில் வந்திடும் எனச்சிலரை விட்டான்.

       (இ - ள்.) அன்னவை உரைத்தவரை மன்னவன் அமைத்து -
அம் மொழிகளைக் கூறியவரை மன்னவன் கையமைத்து இருக்கச் செய்து,
பல பேசுவது என்னை - பலவாறு பேசுவதால் பயன் என்ன, இ ஏழை
யடி தானோ பின்னை யடி - அக் குழந்தையைத் தூக்கிச் சென்ற பின்
காணப்பட்ட அடி இந்தப் பெண்ணின் காலடிதானோ?, பிறிது சென்றது
உளதோ - வேறு சென்ற அடி உண்டோ, எனக் கண்டு இந் நொடியில்
வந்திடும் எனச் சிலரை விட்டான் - என்று அறிந்துகொண்டு
நொடிப்பொழுதில் வந்து சேருங்கள் என்று சிலரை அனுப்பினான்.

     மன்னவன் அவ்வாறு கூறிய காவலர்களைக் கையமைத்து நிறுத்தி,
வேறு சிலரை விடுத்தான். 'இப் பெண்ணின் அடிச்சுவடு தவிர அயலார்
அடிச்சுவடு வேறு அத் தெருவில் இல்லையோ உளதோ என்று அறிந்து
வருக' என்று அவர்கட்குக் கூறினன் எனக் கொள்க.
                                                    (88)

 
        அடிச்சுவடு நோக்கல
1065. போற்றடி பணிந்தவர்கள் போய்மறுகி னூடே
காற்றடி சிதைக்குமுனர் கண்டிடுதும் என்றே
மாற்றடியில் ஆற்றரிய வல்லியடி வைப்பின்
வேற்றடிகள் பார்த்தவர் விரைந்துநெறி சென்றார்.

     (இ - ள்.) போற்று அடி பணிந்து அவர்கள் மறுகின் ஊடே
போய் - மக்களால் போற்றப்படும் மன்னனுடைய அடிகளைப் பணிந்து
அவர்கள் வீதியின் வழியே சென்று, காற்று அடி சிதைக்கு முனர்
கண்டிடுதும் என்று - காற்று காலடிச்சுவட்டை அழிக்குமுன் சென்று
காணுவோம் என்று, மாற்று அடியில் ஆற்றரிய வல்லி அடி வைப்பின் -
மாறுகொண்டு அடித்தபோது தாங்க முடியாது வருந்திய சந்திரமதி அடி
வைத்த இடத்தில், வேற்று