பக்கம் எண் :


517

அடிகள் பார்த்து அவர் விரைந்து நெறி சென்றார் - வேற்று அடிகள்
இருக்கின்றனவோ என்று பார்த்துக் கொண்டு அவர்கள் விரைந்து வழியில்
சென்றார்கள்.

     அடிச்சுவடு பார்த்துவரச் சென்றவர் முதலிற் சந்திரமதியைக்
கொண்டுவரும்போது, அவள் மிதித்த காற்சுவட்டினை முதலில் நோக்கி,
அதுபோலச் சுவடு அரண்மனையினின்று அத் தெருவிற் சென்ற
அறிகுறியுண்டோ? என விரைவில் ஆயத் தொடங்கினர் என்பது.
                                                    (89)

 
    கோசிகன் அடிச்சுவட்டினை மாற்றுதல்   
1066. அங்கவர்கள் வந்திடுமுன் அத்தெரு வகத்துக்
கங்கருகு கன்னல்விளை கன்னபுரி மன்னன்
மங்கையடி யேயெழுதி மற்றையடி யெல்லாம்
அங்கைகொடு நீவிமுனி கௌசிகன்அ ழித்தான்.

     (இ - ள்.) அத் தெரு அகத்து அங்கவர்கள் வந்திடுமுன் -
அந்தத் தெருவினிடத்து அவர்கள் வருவதற்கு முன்னால், முனி கௌசிகன்
- கௌசிக முனிவன், கங்கு அருகு கன்னல் விளை கன்னபுரி மன்னன் -
வயல்களில் கரும்பு விளைகின்ற கன்னோசி நாட்டு மன்னனுடைய, மங்கை
அடியே எழுதி - மங்கையாகிய சந்திரமதியின் காலடிச்சுவட்டை எழுதி,
மற்றையடி எல்லாம் அங்கை கொட நீவி அழித்தான் - மற்ற
அடிச்சுவடுகளை யெல்லாம் தன் அழகிய கைகொண்டு தடவி அழித்தான்.

     கௌசிகன் இதனை ஞானக்கண்ணாலறிந்தான்; உடனே அங்கு
வந்தான். சந்திரமதி அடிச்சுவடு தவிர, மற்றைக் கள்வர்கள் அடிச்சுவடு
முழுதும் மறையும்படி தன் கைகளால் அழித்துச் சென்றான் என்று
கொள்க.
                                                    (90)

 
1067. எந்தவடி வந்ததென எண்ணியவண் நண்ணி
அந்தவடி பின்சுவ டமைப்பனை வருங்கண்(டு)
இந்தவடி யேமுழுதும் யாவர்களும் இங்கே
வந்தவடி இல்லையென மன்னனுழை வந்தார்.

     (இ - ள்.) எந்த அடி வந்தது என எண்ணி அவண் நண்ணி -
எந்தக் கால் இங்கு வந்தது என நினைத்து ஆராய்ந்து அவ்விடத்தை
அடைந்து, அந்த அடியின் சுவடு அமைப்பு அனைவரும் கண்டு - அந்த
அடிச்சுவட்டின் அமைப்பை யாவரும் பார்த்து, இந்த அடியே முழுதும் -
முழுதும் வந்த அடியேயாகும், யாவர்களும் இங்கே வந்த அடி இல்லை
என - வேறு யாரும் இங்கு வந்த அடிச்சுவடு இல்லை என்று, மன்னன்
உழை வந்தார் - மன்னனிடம் கூற வந்தார்கள்.

     விசுவாமித்திரன் அழித்துவிட்டதால் சந்திரமதியின் அடிச்சுவடு
தவிர, வேறு அடிச்சுவடு ஆங்கில்லை. அரண்மனைக்கு வந்த வடிச்சுவடும்
அங்கிருந்து சென்ற வடிச்சுவடும் அவளுடையனவாகவே யிருந்தன; கண்டு
சென்றனர் வந்தவர்கள் எல்லாரும்.
                                                    (91)