பக்கம் எண் :


518

  அடிச்சுவடு கண்டு வந்தவர் அரசனுக்குக் கூறுதல்   
1068. உற்றடி வணங்கியவிர் முற்கலைஒ துக்கிச்
சுற்றடிகள் பற்பல தொடர்ந்துநுனி சென்றேம்
அற்றடியின் இக்கொடிய கள்ளியடி யல்லால்
மற்றடிகள் இல்லையென மன்னனொ டுரைத்தார்.

     (இ - ள்.) உற்ற அடி வணங்கி - மன்னனுடைய சிறந்த அடிகளை
வணங்கி, அவிர் முன் கலை ஒதுக்கி - விளங்கின்ற முன் ஆடைகளை
ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு, சுற்று அடிகள் பற்பல தொடர்ந்து நனி
சென்றேம் - சுற்றிச் செல்லுகின்ற பலப்பல அடிகளையும் மிகவும்
தொடர்ந்து நாங்கள் சென்றோம். அற்றடியின் இக் கொடிய கள்ளி அடி
அல்லால் - அவ் வடிகளில் இந்தக் கொடிய கள்ளியின் அடிகளே
அல்லாமல், மற்றடிகள் இல்லை என மன்னனொடு உரைத்தார் - வேறு
அடிகள் இல்லை என்று மன்னனிடம் கூறினர்.

     முன் கலை ஒதுக்குதல் - அரசன் முதலிய பெரியோர் முன்
நிற்போர் தம் முன் ஆடையை ஒதுக்கிப் பிடித்துக்கொள்ளுதல் வழக்கு.
'சுற்றிலும் உள்ள காற்சுவடுகளை நோக்கிச் சென்றோம்; இவளடியன்றி
வேறு அடிகள் தோன்றவில்லை அத் தெருவில்' என்றார்.
                                                    (92)

   மீண்டும் அரசன் வினாதலும் விடையும்  
1069. வள்ளலும் வருந்திமிக மங்கைமுகம் நோக்கி
உள்ளதுரை செய்கென உரைத்திட மறித்தும்
கள்ளியெனை யல்லதிலை யென்றுகழ றக்கேட்(டு)
அள்ளல்வயல் நாட்டரசன் நொந்தகம்வி யந்தான்.

       (இ - ள்.) வள்ளலும் மிக வருந்தி மங்கை முகம் நோக்கி -
மன்னனும் மிக வருந்திச் சந்திரமதியின் முகத்தைப் பார்த்து, உள்ளது
உரை செய்க என உரைத்திட - உண்மையை நீ கூறு என்றவுடன்,
மறித்தும் கள்ளி எனை அல்லது இலை என்று கழறக் கேட்டு -
மறுபடியும் கள்ளியாகிய என்னைத் தவிர வேறு யாரும் செய்யவில்லை
என்று சொல்லக் கேட்டு, அள்ளல் வயல் நாட்டு அரசன் நொந்து அகம்
வியந்தான் - சேறு நிறைந்த வயல் சூழ்ந்த நாட்டினையுடைய மன்னன்
மனம் வருந்தி வியப்பு அடைந்தான்.

     மன்னனுக்கு இவள் முகக்குறி முதலியவை 'கொலைகாரி இவள்!'
என்ற குறிப்புக் காட்டில. ஆதலாற் பின்னும் அவளையே வினவினன்.
அவளும் முன் சொன்னபடியே சொன்னாள்; என்ன செய்வான் மன்னன்!
வியப்படைந்தான்!
                                                    (93)

 
         மன்னன் வருந்தி யாய்ந்து துணிதல்
1070. கொல்லஇவள் வல்லவளும் அல்லள்கொலை செய்தாள்
அல்லள்எனில் அங்கொருவர் வந்தவடி இல்லை