அன்பினால்
என்பதை ஈரிடத்தும் கூட்டி நடுநிலைத் தீவகமாகக்
கொண்டு பொருள் கொள்க : இடைநிலைத் தீவக அணி. தரப்பிசைப்
பொருள்கோள்.
"உண்ணாமை
யுள்ள துயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு"
என்ற குறட்பாவில்
'ஊன்' என்ற சொல், ஊசல் கயிறுபோன்று ஈரிடத்துஞ்
சென்று வருதல்போல், ஈண்டும் 'அன்பினால்' என்ற சொல்
ஈரிடத்துஞ்சேறலின் தாப்பிசைப் பொருள்கோள். அரிச்சந்திரன் அரசின்
சிறப்புக் கூறப்பட்டது.
"சீத
மதிக்குடைக்கீழ்ச் செம்மை யறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் றனிக்காத்தான்-மாத
ரருகூட்டும் பைங்கிளியு மாடற் பருந்து
மொருகூட்டில் வாழ வுலகு"
என்ற நளவெண்பாவின் கருத்தைத் தழுவியது இது.
(20)
94. |
பொருளும்
வேத புராணமும் புந்தியிற்
றெருளும தான தியாகமும் ஆகமும்
அருளின் மாதவ மும்வள முமஉயிர்க்
கருளும் தோன்றுறும் அந்நக ரத்தினே. |
(இ - ள்.)
அந்நகரத்தின் - அந்த அயோத்திநகரத்தில் வாழ்
மக்களிடத்தில், பொருளும் - மெய்ப்பொருள் காணும் அறிவும், வேத
புராணமும் - வேத புராண நூல் அறிவும், புந்தியில் தெருளும் - மனம்
ஐயத்தினீங்கிய தெளிவும், தான தியாகமும் - ஈகையும் பிறர்க்கு உயிரையும்
கொடுக்கும் தியாகமும், ஆகமமும் - நூல்களையுணர்ந்த அறிவும், மருளில்
மாதவமும் - மயக்கமில்லாத சிறந்த தவமும், வளமும் - செல்வமும்
உயிர்க்கு அருளும் - பிறவுயிர்களின்மேற் செல்லும் அருளும்,
தோன்றுறும் - விளக்கமாகத் தோன்றும்.
பொருள், ஈண்டு மெய்ப்பொருளைக் குறித்தது; "பொன்னும்
மெய்ப்
பொருளும் தருவானை" என்பது தேவாரம். மக்கள் பரஞானமாகிய
அருளுணர்வும் அபரஞானமாகிய கலையறிவும் பெற்றிருந்தனர். உலகர்க்கு
வேண்டிய வேத நூலையும், அருள்தோயப் பெற்றார்க்கு வேண்டிய ஆகம
நூலையும் கற்றிருந்தனர். உம்மை : எண்ணும்மை. வேதப்பொருளை
விளக்கியுரைப்பன புராணங்கள்.
"எண்ணிலாச் சாகைகு வால்களால் தெரித்திங்கு
எம்மனோர் மாச றத்தெளி
நுண்ணிய நியாய ஒழுங்குக ளானும்
நுவன்றுபுத் தேற்றும் நின்பெரும்
பண்ணவா விளங்கப் புராணங்க ளெல்லாம்
பன்முறை உரைத்திடும் அன்றே
கண்ணிலாச் சிறுவர் தமக்கும்உள் ளங்கை
நெல்லியங் கனியெனும் படியே"
"ஆரண நூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது."
-சிவஞான சித்தியார்.
(21)
|