|
| |
வீரவாகு
வருதல் |
| 1077. |
விரைவின்
ஓடிச்சென் றவன்புலைச் சேரியின் மேவி
அரசர் கோனுனை அருளிப்பா டெனவுரைத் தழைக்க
சுரைகொள் வெள்ளைவாய் சிவந்தகண் கருநிறச் சுடர்வாள்
கரத லத்தொடுங் கடிதுவந் தரசனைக் கண்டான். |
(இ
- ள்.) விரைவின் ஓடிச் சென்று அவன் புலைச்சேரியின் மேவி
- வேலைக்காரன் விரைவாக ஓடிச்சென்று வீரவாகுவினுடைய
புலைச்சேரியை அடைந்து, அரசர் கோன் உனை அருளிப்பாடு என
உரைத்து அழைக்க - மன்னர் மன்னன் உன்னை அழைக்கின்றார் என்று
கூறியவுடன், சுரை கொள் வெள்ளை வாய் சிவந்த கண் கருநிறம் -
சுரை விதை போன்ற வெண் பற்களையும் சிவந்த கண்களையும் கரு
நிறத்தையும் உடையவனாய், சுடர் வாள் கரகலத்தொடும் கடிது வந்து
அரசனைக் கண்டான் - ஒளிவீசும் வாளைக் கையில் பிடித்தவனாய்
வீரவாகு என்பவன் விரைந்து வந்து மன்னனைக் கண்டான்.
சுரை
என்பது ஆகுபெயராய் அதன் விதையை யுணர்த்தியது பின்
உவமையாகுபெயராய்ப் பல்லினை யுணர்த்தியது. சுரை விதை முதியோர்
பற்களுக்கு உவமையாம். "சுரை வித்துப்போலும் தம் பல்" (நாலடியார்,
32-5). "நிரைமுத் தனைய நனையுங் காணாய், சுரைவித் தேய்ப்பப்
பிறழ்ந்து வேறாயின" (மணிமேகலை, 20. 49-50) எனப் பிறருங் கூறுவது
காண்க. வெள்ளை வாய், சிவந்த கண், கருநிறம் என்பன ஒன்றுக்கொன்று
முரணாய் இன்பம் பயந்து நின்றன.
(101)
| 1078. |
தூர நின்றுவாய்
புதைத்துளம் அலைந்துதூ சொடுக்கிப்
பார மேனியைச் சுருக்கிவீழ்ந் தரசனைப் பணிந்திந்
நேரம் நாயினேன் தன்னையென் நினைந்தவா றென்றான்
வீர வாகுவை நோக்கியவ் வேந்தர்கோன் உரைப்பான். |
(இ - ள்.) தூரம் நின்று வாய்
புதைத்து உளம் அலைந்து தூசு
ஒடுக்கி - தூரத்தில் நின்றுகொண்டு வாயை மூடி மனம் நடுங்கி
ஆடையை ஒடுக்கிப் பிடித்துக்கொண்டு, பாரம் மேனியைச் சுருக்கி
வீழ்ந்து அரசனைப் பணிந்து - பெரிய உடம்பைச் சுருக்கி வீழ்ந்து
அரசனை வணங்கி, இந்நேரம் நாயினேன் தன்னை என் நினைந்தவாறு
என்றான் - இந்த நேரத்தில் நாயேனை என்ன காரணம் நினைத்து
அழைத்தீர்கள் என்றான், வீரவாகுவை நோக்கி அவ் வேந்தர் கோன்
உரைப்பான் - அப்படிக் கேட்ட வீரவாகுவைப் பார்த்து மன்னர் மன்னன்
பேசத் தொடங்கினான்.
பாரம் மேனி - பெரிய உடம்பு. இச் செய்யுளில்
பழையகாலத்து
மன்னன் முன் பணியாளன் நிற்கும் முறை விளக்கப்பட்டுள்ளது.
இயல்புநவிற்சி அணி. வீரவாகு அரசனைப் பணிந்து கூறியபோது அரசன்
கூறுகின்றான்.
(102)
|