பக்கம் எண் :


524

துள்ளி யோடநீ வெட்டெனத் தோகையைக் கொடுத்து
வள்ளி யோன்கையில் தன்கையில் வாளையும் கொடுத்தான்.

     (இ - ள்.) பிள்ளையைக் கொடு போய் - மன்னனுடைய
பிள்ளையைக் கொண்டுபோய், உடல் பிளந்து உயிர் தொலைத்த
கள்ளியை - உடலைப் பிளந்து உயிரைத் தொலைத்து அழித்த இக்
கள்ளத்தனம் உடையவளை, கொலைக் களத்திடைக் கொண்டுபோய் -
கொலைக் களத்திலே கொண்டு சென்று, கவந்தம் துள்ளியோட நீ வெட்டு
எனத் தோகையைக் கொடுத்து - தலையில்லாத உடம்பு துள்ளி ஓடும் படி
நீ வெட்டுவாயாக என்று அப் பெண்ணைக் கொடுத்து, வள்ளியோன்
கையில் தன் கையில் வாளையும் கொடுத்தான் - வள்ளலாகிய
அரிச்சந்திர மன்னனுடைய கையில் தன் கையில் உள்ள வாளையும்
வீரவாகு கொடுத்தான்.

     'இவள் பிள்ளையைக் கொன்ற கள்ளி என் அரசன் கொலை செய்யும்
படி எனக்கு ஆணை தந்தான்; ஆதலால் இவளைக் கொலைக் களத்திற்
கொண்டுபோய் விட்டுவிடு' என்றான் வீரவாகு. தன் கைவாளாயுதத்தையும்
கொடுத்தான் அரிச்சந்திரனுக்கு.
                                                   (105)

 
  அரிச்சந்திரன் தன் மனைவியென அறிந்து வருந்தல்   
1082. வாளை வாங்கித்தன் மாதையும் வாங்கினன் வந்தான்
பாளை ஓதியை அறிந்தனன் பாவையும் அறிந்தாள்
வேளை வென்றவற் கேற்றதோ எனஇறை மெலிந்தான்
காளை வாட்டமும் கோட்டமும் கன்னிகண் டுரைப்பாள்.

       (இ - ள்.) வாளை வாங்கித் தன் மாதையும் வாங்கினன் வந்தான்
- வாளைக் கையில் வாங்கிக்கொண்டு தன் மனைவியையும் வாங்கிக்
கொண்டு வந்தான், பாளை ஓதியை அறிந்தனன் - கூந்தல் பனைபோன்ற
கூந்தலையுடைய அப் பெண் யார் என்று தெரிந்துகொண்டான், பாவையும்
அறிந்தாள் - பாவை போன்ற சந்திரமதியும் தெரிந்து கொண்டாள்,
வேளை வென்றவற்கு ஏற்றதோ என இறை மெலிந்தான் - மன்மதனை
வென்ற சிவபெருமானுக்கு இவ்வாறு நடப்பது விருப்பமோ என்று எண்ணி
அரிச்சந்திரன் மனம் இளைத்தான், காளை வாட்டமும் கோட்டமும்
கன்னி கண்டு உரைப்பாள் - காளை போன்ற மன்னனுடைய
முகவாட்டத்தையும் மனவருத்தத்தையும் அப் பெண் கண்டு உரைக்கத்
தொடங்கினாள்.

     அரிச்சந்திரன் கொலைக்குற்றம் விதிக்கப்பட்டு வந்திருப்பவள் தன்
மனைவி என்றறிந்தான்; 'சிவன் செயலிதுவோ!' என்று மனங்கலங்கினான்.
அது கண்டு சந்திரமதி ஆறுதல் கூறுகின்றாள்.
                                                   (106)

 
      சந்திரமதி தன் கணவனைத் தேற்றுதல்
1083. முன்னை நாளர சாண்டணி முடிபுனைந் திருந்த
மன்னர் செய்கையும் அறங்களும் திறங்களும் வளர்ந்த
இன்ன முங்குறைந்து உயிர்தரித் திருந்தவர் இல்லை
அன்ன தேதுணிபு அடியனேற் கிரங்கலை என்றாள்.