பக்கம் எண் :


530

அப்பா லனைக்கறுவி இவள்கொன்ற தோவலது
   யார்கொன் றதோதெய் வமே
இப்பாவி தன்தலையில் வைத்தாய் உனக்குநடு
   இலையோ எனப்புகலு வார்.

     (இ - ள்.) தப்பாது மன் மகனை உயிர் கொண்டு உதிரம் உண்ட
தறுகண் அரக்கி - அரசன் மகனைத் தவறாது உயிர்க்கொலை செய்து
உதிரம் குடித்த அஞ்சாத அரக்கி, நமர் தம் கைப் பாசம் உற்று வர
வலளோ - நம்மவருடைய கைக் கயிற்றில் அகப்பட்டு வர வல்லவளோ,
விசும்பின் இடை கரவாது இருத்தல் இலளே - வானத்தில் மறையாது
இருக்கின்றாள் அல்லவா, அப் பாலனைக் கறுவி இவள் கொன்றதோ
அலது யார் கொன்றதோ தெய்வமே - அச்சிறுவனைச் சினம் கொண்டு
இவள் கொன்றாளோ அல்லது வேறு யார் கொன்றார்களோ தெய்வமே,
இப் பாவி தன் தலையில் வைத்தாய் உனக்கு நடு இலையோ எனப்
புகலுவார் - இப்பாவியாகிய பெண்ணின் தலையிலே சுமத்தி
வைத்துள்ளாய் உனக்கு நடுநிலை நீதிமுறை இல்லையோ என்று
கூறுவார்கள்.

     'மனிதர்களைக் கொல்லும் அரக்கியாயிருந்தால் கயிற்றிற் கட்டும்
வரை நிற்பாளா? விண்ணில் மறைந்து விடுவாளே! இவள் அரக்கி
போலவும் தோன்றவில்லையே! யார் பிள்ளையைக் கொன்றார்களோ?
இவள்மேல் இப்பழி வந்து சேர்ந்தது போலத் தெரிகிறது! தெய்வத்திற்கும்
கண்ணில்லைபோலும்!' என்று சிலர் கூறி வருந்தினர்.
                                                   (116)

 
1093. கொலைகாரி யைத்தெருவில் விலைகூறி விற்றபடு
   கொலைகார துட்டன் இவனும்
புலையாவி னைக்கொலைசெய் இவளாவி கொல்வதொரு
   பொருளோ எனக்கதறு வார்
விலைகூறி விற்றவனும் இவனாகில் விட்டிடுவன்
   விடலீர் எனத் தொடருவார்
கலையால் இறுக்கிமடல் உறவே பிணித்தகயி
   றுடனே பிடித்து வருவார்.

     (இ - ள்.) கொலைகாரியைத் தெருவில் விலைகூறி விற்ற -
கொலை காரியாகிய இவளைத் தெருவில் விலை கூறி விற்ற, படு
கொலைகார துட்டன் - கொடுங் கொலை புரியும் கொடியோனாகிய, புலை
ஆவினைக் கொலை செய் இவனும் இவள் ஆவி கொல்வது -
புலைத்தொழிலாகிய பசுவைக் கொலை செய்கின்ற இவனும் இவளுடைய
உயிரைக் கொல்வது, ஒரு பொருளோ எனக் கதறுவார் - ஒரு பெரிய
செயலோ என்று கதறுவார்கள், விலை கூறி விற்றவனும் இவனாகில் விட்டி
டுவன் விடலீர் எனத் தொடருவார் - இவளை விலை கூறி விற்றவன்
இவனாய் இருப்பின் இவளை விட்டுவிடுவான் ஆதலால் விடாதீர்கள் எனத்
தொடர்ந்து செல்வார், கலையால் இறுக்கி மடல் உறவே பிணித்த
கயிறுடனே பிணித்து வருவார் - ஆடையால் முதலில் உடலை இறுக்கிக்
கை மடல்களையும் சேர்த்துக் கட்டிய கயிற்றைத் தாமும் பிடித்து
வருவார்கள்.