|
'இவளை
விற்றவன்இவனாகிலும் பசுவைக் கொலைசெய்யும் புலையன்
இவன், இவளையும் கொல்லாமல் விடமாட்டான்' என்பர் சிலர்; 'விற்றவன்
வெட்டுவானா? காணாத இடத்திற்குக் கொண்டுபோய்க் கொல்லாமல்
விட்டுவிடுவான் ஆதலால், நாம் தொடர்ந்துபோய்ப் பார்க்கவேண்டும்'
என்று கூறித் தொடர்வார் சிலர். சிலர் அவளைக் கட்டிய கயிற்றை அவன்
பிடித்துச்செல்வதுபோலத் தாமும் பிடித்துச் செல்வார்.
(117)
| 1094. |
தனியாய பாவிகுறை
எவர்போய் உரைத்திடுவர்
தருமா லயப்புர வலன்
அனியாய மென்றுசிறி(து) உணராதொர் பெண்பழியை
அவமே கொளக்க ருதினான்
இனியார் இரங்குபவர் எனவே யலைந்துவயி(று)
எரியா வுலைந்து சுழல்வார்
கனிவாய் புலர்ந்துநிலை தளர்வார் கலங்கியுடல்
கரைவார் புலம்பி யழுவார். |
(இ - ள்.) தனியாய பாவி குறை
எவர் போய் உரைத்திடுவர் -
யாரும் ஆதரவற்ற பாவியாகிய இவளுடைய குறையை யார் போய்
உரைப்பார்கள், தரும ஆலயப் புரவலன் - தருமத்துக்கு உறைவிடமாகிய
மன்னன், அநியாயம் என்று சிறிது உணராது - இவளைக் கொல்வது
நீதிமுறைக்குத் தவறு என்று சிறிதும் அறியாமல், ஓர் பெண் பழியை
அவமே கொளக் கருதினான் - ஒரு பெண்ணினுடைய பழியை வீணாகக்
கொள்ளக் கருதியிருக்கின்றான், இனி யார் இரங்குபவர் எனவே அலைந்து
- இனிமேல் இரக்கங்கொள்வதற்கு யார் இருக்கின்றார்கள் என்று வருந்தி,
வயிறு எரியா உலைந்து சுழல்வார் - வயிறு எரிந்து வருந்தி மனம்
தளர்வார், கனி வாய் புலர்ந்து நிலை தளர்வார் கலங்கி உடல் கரைவார்
- கனிபோன்ற வாய் காய்ந்து நிலை தளர்வார்கள் மனங் கலங்கி உடல்
இளைப்பார்கள், புலம்பி அழுவார் - புலம்பி வாய்விட்டு அழுவார்கள்.
'ஆதரவில்லாத பாவி இவள் குறையை அரசனுக்குப் போய்க்
கூறுவார் யார்?' என்று காசிநகர மக்கள், வயிறெரிந்து அலைந்து உலைந்து
சுழல்வார்; வாய் புலர்வார்; நிலை தளர்வார்; மனம் கலங்குவார்; கரைவார்;
புலம்பியழுவராயினர் என்க.
(118)
| 1095. |
வல்லோர்கள்
வல்லபடி சொல்வார்கள் மன்னுமிறை
மருமானை இவள்கொன் றவா(று)
இல்லாத போதிவளை வறிதே வதைத்தபழி
யார்பால தென்று பகர்வார்
கொல்லாது வன்சிறையில் வைத்தே விளங்கினிவள்
கொலைதான் வதைத்திடு தலாம்
அல்லாது விட்டிடலும் அறமாகும் என்னஅவர்
அவரோ(டு) உரைத்துழ லுவார். |
|