|
(இ
- ள்.) வல்லோர்கள் வல்லபடி சொல்வார்கள் - சொல் வன்மை
யுடையவர்கள் வாய்மொழி வன்மைக்குத் தக்கபடி சொல்வார்கள், மன்னும்
இறை மருமானை இவள் கொன்றவாறு இல்லாத போது - நிலைபெற்ற
அரசனுடைய மைந்தனை இவள் கொன்றது உண்மை இல்லாதபோது,
இவளை வறிதே வதைத்த பழி யார்பாலது என்று பகர்வார் - இவளை
வீணாகக் கொன்ற பழி யாரைச் சேரும் என்று கூறுவார்கள், கொல்லாது
வன் சிறையின் வைத்தே - இவளைக் கொல்லாமல் வலிய சிறைக்கூடத்தில்
வைத்திருந்து, இவள் கொலை தான் விளங்கின் வதைத்திடுதல் ஆம் -
இவள் கொலை செய்தது உண்மை என்பது புலப்படுமாயின் கொல்லுதல்
முறை ஆகும், அல்லாது விட்டிடலும் அறம் ஆகும் - இல்லையானால்
விட்டு விடுதலும் அறநெறியாகும், என்ன அவர் அவரோடு உரைத்து
உழலுவார் - என்று அவர் அவர்கள் தாம்தாம் உரைத்து வருந்துவார்கள்.
'இவள் மன்னன் மகனைக் கொல்லாதவளாக இருந்தால், இவளைக்
கோன்ற பாவம் அரசனையன்றோ சாரும்? இவளைச் சிறையில்
வைத்திருந்து பின் கொன்றவள்தான் என்று நன்கு தெளிந்தபின்
கொல்லலாம்; இல்லையெனில் விட்டுவிடலாம்; அதுவுஞ் செய்யாது உடனே
கொலை செய்யும்படி கூறியது நன்றன்று' என்றும் பேசினர்.
(119)
| 1096. |
பதியேது பாவியிவள்
வரவேது வந்துபெறு
பலனேது பாவம் நிகழ்பெண்
மதியேது இத்தனையும் விளைவித்த தேதென்று
மறுகா மருண்டு விழுவார்
விதியே அறக்கோடியை யெளியாள் தனைக்கறுவி
விலைகூறி விற்றது மலால்
சதியே விளைத்தனைஇ தறமோ எனச்சிலர்கள்
தளர்வார் முகத்தில் அறைவார். |
(இ - ள்.) பதி ஏது பாவி இவள்
வரவு ஏது வந்து பெறு பலன்
ஏது - இவளுடைய ஊர் ஏது? இப்பாவிப் பெண் இவ்வூருக்கு வந்த
காரணம் ஏது? வந்து அடைந்த பலன் என்ன? பாவம் நிகழ் பெண் மதி
ஏது - இப் பாவத்தைச் செய்ய இப் பெண்ணின் அறிவு மாறிய காரணம்
யாது?, இத்தனையும் விளைவித்தது ஏது - இவ்வளவு செயல்களையும்
உண்டாக்கிய விதி ஏது?, என்று மறுகா மருண்டு விழுவார் - என்று
சொல்லி மயங்கி விழுவார்கள், விதியே அறக் கொடியை எளியாள்
தனைக் கறுவி விலை கூறி விற்றதும் அலால் - விதியே நீ மிகவும்
கொடுமை உடையாய்! எளியவளாகிய இவளைச் சினந்து விலை கூறி
விற்கும்படி செய்தது அல்லாமல், சதியே விளைத்தனை இது அறமோ
எனச் சிலர்கள் தளர்வார் முகத்தில் அறைவார் - நீ மிகுந்த கொடுமை
செய்துவிட்டாய்! இது அறமாகுமோ? என்று சிலர் மனம் தளர்வார்
முகத்தில் அறைந்து கொள்வார்கள்.
'பாவியிவள் பிறந்த ஊர் ஏது? இங்கே எதுகுறித்து
வந்தாள்? வந்து
என்ன பயன் பெற்றாள்? விதியே இவ்வாறு இவளைப் படைத்துக் கொலை
செய்யும்படி விட்டனையே!' என்று தெய்வத்தை நொந்து சிலர் புலம்பினர்.
(120)
|