பக்கம் எண் :


533

1097. அங்கே அடித்தவடி இங்கே அலைக்குமலை(வு)
   அல்லாமல் எய்து கொலையும்
பங்கே ருகத்தினறு மலர்போல் விளங்குமுகம்
   அறியாத பாவை யனையாள்
எங்கே பிறந்தனள்கொல் எங்கே வளர்ந்தனள்கொல்
   எங்கே இருந்தாள் கொலோ
இங்கே இறந்தவிய வந்தாள் எனப்பலரும்
   இடைகின்ற எல்லை தனியே.

     (இ - ள்.) அங்கே அடித்த அடி இங்கே அலைக்கும் அலைவு
அல்லாமல் - அங்கே அடித்த அடிக்கு இங்கே வலித்த வலிபோல
இருக்கிறதே அல்லாமல் (இது உண்மையா), பங்கேருகத்தின் நறு மலர்
மலர்போல் விளங்கு முகம் - தாமரையின் நல்ல மலர்போல்
விளங்குகின்றது இவளுடைய முகம், எய்து கொலையும் அறியாத பாவை
அனையாள் - இப்போது நமக்குக் கொலை நேர்ந்ததே என்றும்கூட
துன்பத்தையும் அறியாத பாவைபோன்ற பெண், எங்கே பிறந்தனள் கொல்
எங்கே வளர்ந்தனள்கொல் எங்கே இருந்தனள்கொலோ - எங்கே
பிறந்தவளோ? எங்கே வளர்ந்தவளோ? எங்கே இருந்தாளோ?, இங்கே
இறந்து அவிய வந்தாள் எனப் பலரும் இடைகின்ற எல்லை தனிலே -
இங்கே இறந்து அழிய வந்திருக்கின்றாள் என்று பலரும் வருந்துகின்ற
அந்த நேரத்திலே.

     'தென்னை மரத்திலே தேள் கொட்டப் பனை மரத்திலே வீங்கியது
போல இக்கொலை நடந்திருக்கிறது? யார் கொன்றார்களோ மன்னன்
மகனை! இவளைக் கொலைக்காரியாகக் கொண்டுவந்தார்கள். இது பெரும்
பாவம்! கொலைகாரியின் முகம் இவ்வளவு தெளிவாக இருக்குமோ?
தாமரைப் பூப்போல விளங்குகிறது! எங்கேயோ பிறந்து இங்கே
இறக்கவந்தாள் போலும்!' என்று சிலர் கூறி வருந்தினர். இவ்வாறு
நகரமக்கள் புலம்பும் வேளையில் கொலைக் களம் கொண்டு
செல்கின்றான் அரிச்சந்திரன்.
                                                    (121)

 
  அரிச்சந்திரன் நகரத்தை நீங்கிக் கொலைக்களம் குறுகுதல்

   
         கலி நிலைத்துறை
  
1098. என்ன பாதகஞ் செய்தனம் எனவிறை நகைத்துக்
கன்னி கைகளைக் கட்டிய கயிறுதான் பிடித்துத்
துன்னு மாமணித் தோரண வாயிலைக் கடந்து
பொன்னின் மாநகர்ப் புரிசையின் புறத்துவந் திறுத்தான்.

       (இ - ள்.) என்ன பாதகம் செய்தனம் என இறை நகைத்து -
என்ன பாவம் செய்தோமோ என அரசன் சிரித்து, கன்னி கைகளைக்
கட்டிய கயிறுதான் பிடித்து - சந்திரமதியின் கைகளைக் கட்டியிருக்கின்ற
கயிற்றைப் பிடித்துக்கொண்டு, துன்னு மாமணித் தோரண வாயிலைக்
கடந்து - நெருங்கிய சிறந்த மணிகள் பதித்த தோரணங் கட்டிய
வாயிலைக் கடந்து, பொன்னின் மாநகர்ப் புரிசையின் புறத்து வந்து
இறுத்தான் - பொன்மயமாய் அழகுபெற்று விளங்கும் பெரிய நகரத்தின்
மதிற்புறத்தை வந்து அடைந்தான்.